உ.பி.: கேமிங் செயலி வழியே ஈர்த்து குழந்தைகளிடம் மதமாற்றம்; அதிர்ச்சி தகவல்
|உத்தர பிரதேசத்தில், குரான் ஒப்புவித்தல் போட்டி என ஆன்லைனில் கேமிங் செயலி வழியே குழந்தைகளை மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் தெரிய வந்து உள்ளது.
காசியாபாத்,
காஷ்மீரில் இளைஞர்களை ஈர்த்து, பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்தும் பணியில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள், அவற்றின் கிளைகள் மற்றும் தனிநபர்கள் மறைமுக அடிப்படையில் செயல்பட்டு வரும் அதிர்ச்சி தகவல் அவ்வப்போது வெளிவருகின்றன.
சமீபத்தில் இந்த விவகாரம் பற்றி தி கேரளா ஸ்டோரி என்ற படம் வெளிவந்து மக்களிடையே பிரபலம் அடைந்தது. அதில், இளம்பெண்களை படிக்கும்போதே, மனமாற்றம் செய்து, வெளிநாட்டில் இயங்கி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சேரும்படி கட்டாயப்படுத்துவது போன்ற காட்சிகள் இடம் பெற்று பரபரப்பை ஏற்படுத்தின.
நாட்டில், மத சுதந்திரம் உள்ள சூழலில், மதமாற்றத்தில் ஈடுபடுவது சட்டவிரோதம் என்று கூறப்பட்ட போதிலும், சில இடங்களில் இந்த விசயம் நடைபெற்றும், வெளிவந்து கொண்டும் இருக்கிறது.
இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் குரான் ஒப்புவித்தல் போட்டி என ஆன்லைனில் கேமிங் செயலி வழியே குழந்தைகள் மற்றும் பருவவயதினரை இலக்காக கொண்டு அவர்களை தங்களது மதத்திற்கு மாற்றும் முயற்சியில் சிலர் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் தெரிய வந்து உள்ளது.
இதுபற்றி உத்தர பிரதேசத்தின் காசியாபாத் நகர துணை காவல் ஆணையாளர் நிபுன் அகர்வால் இன்று கூறும்போது, ஆன்லைன் விளையாட்டு என கூறி குழந்தைகளையும், இளம்பருவத்தினரையும் தங்களது இலக்காக வைத்து செயல்பட்டு உள்ளனர்.
இதன்படி, குரான் ஒப்புவித்தல் போட்டிகளை நடத்தி அதில் வெற்றி பெற வேண்டும் என கூறப்படுகிறது. இந்த முறையை பயன்படுத்தி, மதமாற்றம் செய்யும் முயற்சி நடந்து உள்ளது.
பிரபல இஸ்லாமிய மதபோதகர்களான ஜாகீர் நாயக் மற்றும் தாரீக் ஜமீல் ஆகியோரது வீடியோக்களையும் கேமிங்கில் ஈடுபடுபவர்களிடம் காட்டி உள்ளனர் என துணை காவல் ஆணையாளர் கூறியுள்ளார்.
இதுபற்றி கவிநகர் போலீசார் விசாரணை நடத்தி கடந்த மே 30-ந்தேதி மதமாற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்து உள்ளனர். இதில், மராட்டியத்தின் தானே நகரை சேர்ந்த ஷாநவாஸ் கான் என்ற பட்டூ மற்றும் சஞ்சய் நகர் பகுதியில் உள்ள மசூதியின் மதபோதகரான நன்னி என்ற அப்துல் ரகுமான் ஆகிய 2 பேர் வழக்கில் சேர்க்கப்பட்டனர்.
ரகுமானை போலீசார் கைது செய்து உள்ளனர். அவரிடம் நடந்த விசாரணையில், ஜெயின் சமூக சிறுவன் ஒருவன் மற்றும் இரண்டு இந்து சிறுவர்களை மதம் மாற்றிய விவரம் கண்டறியப்பட்டது. தொடர்புடைய, மின்னணு சான்றுகள் மற்றும் பத்திரங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.
தப்பியோடிய ஷாநவாஸ் கானை பிடிப்பதற்காக மராட்டியத்திற்கு போலீசார் அடங்கிய குழு ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என அவர் கூறியுள்ளார்.