< Back
தேசிய செய்திகள்
அமேதியில் ராகுல், ரேபரேலியில் பிரியங்கா போட்டியிட வேண்டும்: உ.பி காங்., தீர்மானம்
தேசிய செய்திகள்

அமேதியில் ராகுல், ரேபரேலியில் பிரியங்கா போட்டியிட வேண்டும்: உ.பி காங்., தீர்மானம்

தினத்தந்தி
|
11 March 2024 5:28 PM IST

அமேதியில் ராகுல், ரேபரேலியில் பிரியங்கா போட்டியிட வேண்டும் என்று உத்தரபிரதேச காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

லக்னோ,

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான 39 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை காங்கிரஸ் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதில் ராகுல் காந்தி மீண்டும் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தது.

ராகுல் காந்தி அமேதியிலும், பிரியங்கா காந்தி ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடலாம் என்று யூகங்கள் நிலவுகின்றன. ஏனெனில் இந்த இரண்டு தொகுதிகளும் காந்தி குடும்பத்தின் கோட்டைகளாக கருதப்படுகின்றன.

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் சோனியாகாந்தி, வரும் தேர்தலில் அவரது குடும்ப தொகுதியான உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் இருந்து மக்களவைக்கு போட்டியிடுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த முறை அவர் மக்களவைக்கு போட்டியிடவில்லை என்பதை ரேபரேலி தொகுதி வாக்காளர்களுக்கு இந்தியில் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துவிட்டார். அதே சமயத்தில், அவர் முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராகப்போகிறார் என்பதை உலகுக்கு காட்டும் வகையில், ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கான உறுப்பினர் தேர்தலுக்காக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சோனியாகாந்தி ரேபரேலி தொகுதி மக்களுக்கு எழுதிய கடிதத்தில்," என் மாமனார் பெரோஸ் காந்தி, மாமியார் இந்திராகாந்தி, எனது கணவர் ராஜீவ் காந்தி, நான்(சோனியா காந்தி) என எங்கள் அனைவருக்கும் அன்பு காட்டியுள்ளீர்கள்" என்று எழுதியுள்ளார்.

அரசியல் நிபுணர்கள் இந்த கடிதத்தைப் பார்க்கும்போது, பிரியங்கா காந்தி ரேபரேலி தொகுதியில் நிற்க வாய்ப்பு இருப்பதை சூசகமாக சோனியாகாந்தி தெரிவித்து இருக்கிறார் என்று கருதுகிறார்கள்.

கடந்த 2019 ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அமேதி தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, பா.ஜ.க.வின் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தார்.

உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் கூறியதாவது, " வரும் நாடாளுமன்ற தேர்தலில் ரேபரேலி மற்றும் அமேதியில் காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிட வேண்டும் என்று உத்தரப்பிரதேச மாநில தேர்தல் குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. கட்சியின் அடுத்த வேட்பாளர் பட்டியலில் இவர்களின் பெயர்கள் இடம்பெறும். ஏனென்றால், இந்த நாடாளுமன்றத் தொகுதி மக்களும், கட்சித் தொண்டர்களும் இவர்கள் இங்கிருந்து போட்டியிட வேண்டும் என்று விரும்புகின்றனர். இறுதி முடிவை மத்திய தேர்தல் குழு எடுக்கும்" என்றார்.

அமேதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ராகுல் காந்தி களமிறங்குவார் என்றும் அவரது பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அமேதி காங்கிரஸ் மாவட்டத் தலைவர் பிரதீப் சிங்கால் கடந்த மார்ச் 6-ம் தேதி தெரிவித்திருந்தார்.

மேலும் செய்திகள்