< Back
தேசிய செய்திகள்
உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை சந்தித்து வாழ்த்து பெற்ற தி கேரளா ஸ்டோரி படக்குழுவினர்
தேசிய செய்திகள்

உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை சந்தித்து வாழ்த்து பெற்ற 'தி கேரளா ஸ்டோரி' படக்குழுவினர்

தினத்தந்தி
|
11 May 2023 12:48 AM IST

'தி கேரளா ஸ்டோரி' படக்குழுவினர் லக்னோவில் முதல் மந்திரி-யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர்.

லக்னோ,

விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி'. இந்த படம் கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம் பெண்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அசம்பாவிதங்களை தவிர்க்க தியேட்டர்களில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டது.

இதையடுத்து தமிழகத்தில் மால்களில் உள்ள திரையரங்குகளில் மட்டும் இந்த படம் திரையிடப்பட்ட நிலையில் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டது. சட்ட ஒழுங்கு பிரச்சினை, படத்திற்கான வரவேற்பு இல்லாததால் திரையரங்க நிர்வாகங்கள் இந்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும் இந்த படத்திற்கு பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

உத்தர பிரதேசத்தில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்படும் என அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்தியநாத் அறிவித்திருந்தார். இந்த நிலையில் 'தி கேரளா ஸ்டோரி' படக்குழுவினர் லக்னோவில் முதல் மந்திரி-யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தனது அமைச்சர்களுடன் இந்த படத்தைப் பார்க்க உள்ளதாகவும் முதல்வர் செயலகம் கூறியுள்ளது. மாநிலத்தில் திரைப்படத்திற்கு வரி இல்லை என அறிவித்த பிறகு படம் திரையிடப்படுகிறது. மத்திய பிரதேசம் மாநிலம் தான் முதலில் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு வரிவிலக்கு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்