உ.பி. அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை; அரசு உத்தரவு
|உத்தர பிரதேசத்தில் அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை விதித்து அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது.
லக்னோ,
உத்தர பிரதேசத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறிய கூடிய பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கவும், காகிதங்கள் வீணாகாமல் தடுக்கவும் முதல்-மந்திரி ஆதித்யநாத் தலைமையிலான அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், தலைமை செயலகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது. இதன்படி, தலைமை செயலாளர் துர்கா சங்கர் மிஷ்ரா அனைத்து அரசு துறைகளுக்கும் அனுப்பிய செய்தியில், தொடர்ந்து அறிவுறுத்தல் வழங்கியும் அரசு துறைகளில் பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் ஒரு பக்கம் அச்சிடப்பட்ட காகிதங்கள் காணப்படுகின்றன.
சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீவிர பாதிப்பை கவனத்தில் கொள்ளும்போது, காகிதங்களை தவறாக பயன்படுத்துதல் மற்றும் பிளாஸ்டிக்கை பயன்படுத்துவது சரியல்ல.
அதனால், அனைத்து துறை சார்ந்த அரசு அலுவலகங்களிலும், நடத்தப்படும் கூட்டங்களில் தண்ணீர் குடிக்க பிளாஸ்டிக் பாட்டில்களின் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படுகிறது. அச்சிட வேண்டிய தேவை ஏற்பட்டால், காகிதத்தில் இரண்டு பக்கமும் அச்சிடப்பட்டு உபயோகப்படுத்த வேண்டும்.
உடனடியாக அரசின் இந்த உத்தரவை கடுமையாக பின்பற்றப்படுவது பற்றி அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என தெளிவாக அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அது அவர்களின் நன்னெறி மற்றும் அதிகாரப்பூர்வ பொறுப்பாகும் என்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.