< Back
தேசிய செய்திகள்
உ.பி.:  லவ் ஜிகாத், மதமாற்ற வழக்குகளில் 2 ஆண்டுகளில் 833 பேர் கைது; அரசு தகவல்

கோப்பு படம்

தேசிய செய்திகள்

உ.பி.: லவ் ஜிகாத், மதமாற்ற வழக்குகளில் 2 ஆண்டுகளில் 833 பேர் கைது; அரசு தகவல்

தினத்தந்தி
|
10 May 2023 9:57 PM IST

தி கேரளா ஸ்டோரி என்ற மதமாற்ற பட சர்ச்சைக்கு இடையே, லவ் ஜிகாத், மதமாற்றம் தொடர்பாக 833 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என உத்தர பிரதேச அரசு தெரிவிக்கின்றது.

லக்னோ,

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் மதமாற்றம் தொடர்புடைய சர்ச்சையை கிளப்பிய நிலையில், யோகி ஆதியத்நாத் தலைமையிலான உத்தர பிரதேச அரசு அந்த படத்திற்கு வரி விலக்கு அளித்து உள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு நவம்பரில், உத்தர பிரதேசத்தில், சட்டவிரோத மதமாற்ற தடை சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இதனை தொடர்ந்து, உத்தர பிரதேச அரசு, லவ் ஜிகாத் மற்றும் மதமாற்றம் உள்ளிட்டவற்றில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதில் இருந்து நடப்பு ஆண்டு வரையில், ஏறக்குறைய இரண்டரை ஆண்டுகளில் 427 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன என அரசு அறிக்கை தெரிவித்து உள்ளது. இதுதவிர, இந்த வழக்குடன் தொடர்புடைய 833 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என அரசின் அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கின்றது.

இவற்றில் 185 வழக்குகளில், தங்களை கட்டாயப்படுத்தி மதமாற்றத்திற்கு உட்படுத்தினர் என பாதிக்கப்பட்டோர் கோர்ட்டில் கூறியுள்ளனர். சிறுவர், சிறுமிகளை மதமாற்றம் செய்த விவகாரத்தில் 65 வழக்குகளும் இதுவரை பதிவாகி உள்ளன என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

நாடு முழுவதும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ள தி கேரளா ஸ்டோரி படத்திற்கு மேற்கு வங்காளத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு சமீபத்தில் தடை விதித்தது.

தி கேரளா ஸ்டோரி படம் டிரைலர் வெளியானது முதல் பரபரப்புக்கு பஞ்சமின்றி பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகளை எதிர்கொள்ள தொடங்கியது. 3 பெண்களின் உண்மை கதைகள் அடிப்படையில் படம் உருவாகி உள்ளது என கூறப்படுகிறது. அவர்கள் 3 பேரையும் லவ் ஜிகாத் என்ற பெயரில் மோசடி செய்து, பின்னர் கர்ப்பமடைய செய்து, அதன்பின் ஈராக் மற்றும் சிரியாவுக்கு நாடு கடத்தி, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் இணைய செய்த விவரங்களை படம் உள்ளடக்கி உள்ளது.

இயக்குநர் சுதீப்தோ சென் இயக்கத்தில், விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் உருவான திரைப்படத்தில் நடிகைகள் அதா சர்மா, யோகித பிஹானி, சித்தி இத்னானி மற்றும் சோனியா பலானி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களையேற்று நடித்து உள்ளனர்.

கேரளாவில் 32 ஆயிரம் பெண்கள் காணாமல் போயுள்ளனர் என்றும் அதன்பின் அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் தங்களை இணைத்து கொண்டனர் என்றும் டிரைலர் காட்சிகள் அமைந்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தமிழக திரையரங்குகளில் படம் வெளியிடப்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. சட்டம் மற்றும் ஒழுங்கு விவகாரத்தில் கேரளாவிலும் கூட பல திரையரங்குகளில் படம் வெளியிடுவதற்கு, திரையரங்க உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்து விட்டனர்.

எனினும், பயங்கரவாத சதி திட்டங்களை பற்றிய விசயங்களை வெளிக்கொண்டு வந்ததற்காக, பிரதமர் மோடி இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்த அதேவேளையில், மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் இந்த படத்திற்கு மாநிலத்தில் வரி விலக்கும் அளித்து உள்ளார். உத்தர பிரதேச முதல்-மந்திரி ஆதித்யநாத்தும் வரி விலக்கு அறிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்