உ.பி.: இரும்பு தடுப்பில் ஏறி, குதித்த 10 அடி முதலையால் பரபரப்பு; வைரலான வீடியோ
|நன்னீர் கால்வாயில் வசித்து வரும் அந்த முதலையை எச்சரிக்கையுடன் பிடித்து, அதற்கு பாதுகாப்பான கங்கை கால்வாயில் கொண்டு சென்று விட்டனர்.
புலந்த்சாகர்,
உத்தர பிரதேசத்தின் புலந்த்சாகர் நகரில் நரோரா காட் பகுதியில் உள்ள கங்கை கால்வாயில் இருந்து 10 அடி முதலை ஒன்று திடீரென வெளியே வந்துள்ளது.
இதனை அந்த வழியே சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து, வன துறை மற்றும் போலீசாருக்கு தகவல் சென்றது. இதன்பின்பு, அதனை பிடிக்கும் முயற்சி நடந்தது. அதற்கான வேலையில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
அப்போது, மீண்டும் ஆற்றுக்குள் செல்வதற்காக, இரும்பு தடுப்பின் மீது அது ஏறியது. ஆனால், முடியாமல் திரும்பி தரையில் குதித்தது. அவர்களிடம் இருந்து, தப்பி செல்ல முயன்றது.
எனினும், துண்டு ஒன்றால் அதன் தலையை மூடி, அதன் கால்களையும் கட்டி விட அதிகாரிகள் முயன்றனர். இதனால், மீட்பு குழுவினரை அது தாக்குவதில் இருந்து தப்பித்து கொள்ளலாம். இதன்படி, கயிறுகளை கொண்டு அதன் கால்கள் கட்டப்பட்டன.
அதிகாரி ஒருவர் பின்னங்கால்களை கயிறு ஒன்றால் கட்டினார். மற்ற 4 அதிகாரிகள் அதன் தலை மற்றும் முன்னங்கால்களை கயிற்றால் கட்டி, பிடித்து கொண்டனர். சிலர், முதலையின் வாய் பகுதியை கயிற்றால் கட்டினர். 2 பேர் அதன் வாலை பிடித்து தூக்கினர்.
எச்சரிக்கையுடன் செயல்பட்டு, அதிகாரிகள் அதனை பிடித்தனர். அது நன்னீர் கால்வாயில் வசித்து வரும் பெண் முதலை என பின்னர் தெரிய வந்தது. இதன்பின்பு, அதற்கு பாதுகாப்பான கங்கை கால்வாயில் கொண்டு சென்று அதனை விட்டனர்.
அந்த முதலை இரும்பு தடுப்பின் மீது ஏறும் பரபரப்பு வீடியோ ஒன்றும் வைரலானது. இந்த வீடியோ வெளியானதும், 1.55 லட்சம் பேர் பார்வையிட்டு உள்ளனர். இதுபற்றி ஒருவர் வெளியிட்ட விமர்சன பதிவில், நீர் கூட கொதித்து கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு வெப்பநிலை உயர்ந்து உள்ளது என தெரிவித்து உள்ளார்.
இதேபோன்று மற்றொருவர் வெளியிட்ட பதிவில், அதிக வெப்பம். அதனால், மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் கூட பயத்தில் வெளியே ஓடி வருகின்றன என்று தெரிவித்து இருக்கிறார்.