< Back
தேசிய செய்திகள்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள்கோவில்களில் நுழைய எதிர்ப்பு தெரிவிப்போர் மீது கடும் நடவடிக்கை; கலெக்டர் எச்சரிக்கை
தேசிய செய்திகள்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள்கோவில்களில் நுழைய எதிர்ப்பு தெரிவிப்போர் மீது கடும் நடவடிக்கை; கலெக்டர் எச்சரிக்கை

தினத்தந்தி
|
19 Jun 2022 3:25 AM IST

ராம்நகர் மாவட்டத்தில், கோவில்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் நுழைய எதிர்ப்பு தெரிவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் அவினாஷ் மேனன் ராஜேந்திரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ராம்நகர்

ராம்நகர் மாவட்டத்தில், கோவில்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் நுழைய எதிர்ப்பு தெரிவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் அவினாஷ் மேனன் ராஜேந்திரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆலோசனை கூட்டம்

கர்நாடகத்தில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு அரசு சார்பில் வீடுகள் கட்டிக்கொடுக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. அதேபோல் ராம்நகர் மாவட்டத்திலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு அரசு சார்பில் வீடுகள் கட்டிக்கொடுக்கும் பணி நடந்து வருகிறது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அவினாஷ் மேனன் ராஜேந்திரா தலைமை தாங்கினார். கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலெக்டர் அவினாஷ் மேனன் ராஜேந்திரா பேசும்போது கூறியதாவது:-

மாவட்டத்தில் 4 தாலுகாக்களில் அரசு சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. அதாவது தாலுகா தலைநகரங்களில் 5 கிலோ மீட்டர் எல்லைக்குள் அமைந்திருக்கும் அரசு நிலங்களை கையகப்படுத்தி அவற்றில் பயனாளிகளுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்படும்.

அரசு சார்பில் வீடுகள்...

வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் வசித்து வரும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மக்களுக்கும் அரசு சார்பில் வீடுகள் கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கே.எஸ்.ஆர்.டி.சி., ஏ.பி.எம்.சி., நகரசபை, புரசபை நிர்வாகங்களுக்கு சொந்தமான கடைகளை குலுக்கள் முறையில் பயனாளிகளுக்கு ஒதுக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மாவட்டத்தில் மொத்த 827 கிராமங்கள் உள்ளன. இவற்றில் 12 கிராமங்களில் மட்டுமே சுடுகாட்டுக்கு என்று இடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

அந்த சுடுகாடுகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் உடல்களை அடக்கம் செய்ய பலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. சுடுகாடுகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் உடல்களை அடக்கம் செய்ய இடம் ஒதுக்கி தர வேண்டும். அப்படி இடம் ஒதுக்கி தராதவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடும் நடவடிக்கை

ராம்நகர், சன்னப்பட்டணா பகுதிகளில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பவனம் கட்ட முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் மாவட்டத்தில் தகுந்த இடத்தில் புத்த விஹார், மகரிஷி வால்மீகி பவனம் ஆகியவை கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 813 இந்து கோவில்கள் உள்ளன. அவற்றில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். வேலைவாய்ப்பு வழங்கவும், கோவில்களில் அவர்கள் நுழைந்து சாமி தரிசனம் செய்யவும் எதிர்ப்பு தெரிவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ்பாபு, மாவட்ட தலைமை நிர்வாக அதிகாரி திக்விஜய் போட்கே, சமூக நலத்துறை இணை இயக்குனர் யோகேஷ், ராமநகர் நகரசபை கமிஷனர் நந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்