< Back
தேசிய செய்திகள்
2014 வரை ரெயில்வே துறை முழுவதுமாக புறக்கணிக்கப்பட்டு வந்தது - மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்
தேசிய செய்திகள்

'2014 வரை ரெயில்வே துறை முழுவதுமாக புறக்கணிக்கப்பட்டு வந்தது' - மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்

தினத்தந்தி
|
1 Feb 2024 9:42 PM IST

பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளில் ரெயில்வே துறையில் அதிக கவனம் செலுத்தினார் என அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

2024-2025ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது மத்திய அரசின் பல்வேறு சாதனைகள் மற்றும் செயல்பாடுகளை பட்டியலிட்ட அவர், புதிய திட்டங்களையும் அறிவித்தார்.

இந்நிலையில் இடைக்கால பட்ஜெட் குறித்து மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-

"ரெயில்வே துறைக்கு வரலாறு காணாத நிதி ஒதுக்கீடு கிடைத்துள்ளது. இந்திய ரெயில்வே என்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் போக்குவரத்து மற்றும் நமது பொருளாதாரத்தின் முக்கியமான கட்டமைப்பாகும். பத்து ஆண்டுகளுக்கு முன்பு, இந்தத் துறை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது. மேலும் திறன் மேம்பாட்டுக்கான முதலீடு வழங்கப்படவில்லை.

ஆனால் பிரதமர் மோடி இந்த 10 ஆண்டுகளில் ரெயில்வே துறையில் அதிக கவனம் செலுத்தினார். 26,000 கிமீ புதிய பாதைகள் சேர்க்கப்பட்டன. மேலும் 5,500 கி.மீ. புதிய பாதைகள் 2024 ஆம் ஆண்டில் அமைக்கப்படும். கடந்த ஆண்டு மட்டும் 5,000 கி.மீ. புதிய பாதைகள் அமைக்கப்பட்டன.

இந்திய ரயில்வேக்கு 2024-25 நிதியாண்டில் மொத்தம் ரூ.2.52 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பல்வேறு ரெயில் உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்த தமிழ்நாடு ரூ.6,331 கோடி நிலுவைத் தொகையைப் பெற்றுள்ளது. அதேபோல், கேரளாவிற்கு ரூ.2,744 கோடி, இமாச்சல பிரதேசம் ரூ.2,681 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் ரெயில்வே துறைக்கான முழு உத்தியையும் பிரதமர் மோடி மாற்றினார்., இப்போது ரெயில்வே துறையை நவீனமயமாக்குவதற்கான முதலீட்டில் கவனம் செலுத்தப்படுகிறது."

இவ்வாறு மத்திய மந்திரி அஸ்விணி வைஷ்ணவ் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்