< Back
தேசிய செய்திகள்
காரணமில்லாத வெறுப்பு: லட்சத்தீவு விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக இந்திய பிரபலங்கள் கருத்து..!
தேசிய செய்திகள்

காரணமில்லாத வெறுப்பு: லட்சத்தீவு விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக இந்திய பிரபலங்கள் கருத்து..!

தினத்தந்தி
|
7 Jan 2024 4:50 PM IST

மாலத்தீவு அரசியல் தலைவர்கள், பிரதமர் மோடிக்கு எதிராகவும் இந்தியர்களை கேலி செய்தும், தரக்குறைவான கருத்துகளை பகிர்ந்தனர்.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 4-ம் தேதி லட்சத்தீவுக்கு சென்றார். அங்கு ரூ.1,200 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர், லட்சத்தீவு கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். மேலும், லட்சத்தீவில் பிரதமர் மோடி ஸ்நோர்கெலிங் முறையில் கடலில் நீந்தினார். இதுகுறித்த புகைப்படங்களை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டு இருந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இதையடுத்து பலரும் லட்சத்தீவை மாலத்தீவுடன் ஒப்பிட்டு, மாலத்தீவை விட லட்சத்தீவு சிறந்த சுற்றுலாத் தலம் என்று கூறினர்.

இதையடுத்து மாலத்தீவு அரசியல் தலைவர்கள், பிரதமர் மோடிக்கு எதிராகவும் இந்தியர்களை கேலி செய்தும், தரக்குறைவான கருத்துகளை பகிர்ந்தனர். இதனால் கொதித்தெழுந்த நெட்டிசன்கள் இந்தியர்கள் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதை புறக்கணிக்க வேண்டும். மாறாக லட்சத்தீவு உள்ளிட்ட இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த சர்ச்சை குறித்து, பாலிவுட் நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நடிகர்கள் அக்ஷய் குமார், சல்மான் கான், ஜான் ஆபிரகாம், நடிகை ஷ்ரத்தா கபூர் மற்றும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் தங்கள் சமூக வலைதள பக்கங்களில், லட்சத்தீவின் அழகை முன்னிலைப்படுத்தி பதிவிட்டுள்ளார்.

மாலத்தீவு தலைவர்களின் கருத்துகளின் ஸ்கிரீன் ஷாட்களைப் பகிர்ந்துள்ள அக்ஷய் குமார், "மாலத்தீவைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் இந்தியர்கள் மீது வெறுக்கத்தக்க மற்றும் இனவெறிக் கருத்துக்களைக் கூறியுள்ளனர். அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளை அனுப்பும் இந்தியாவுக்கு அவர்கள் இதைச் செய்வது ஆச்சரியமாக இருக்கிறது. நாம் நமது அண்டை நாடுகளுக்கு நல்லவர்கள்தான். ஆனால் இதுபோன்ற காரணமில்லாத வெறுப்பை ஏன் பொறுத்துக் கொள்ள வேண்டும்?

நான் மாலத்தீவுக்கு பலமுறை சென்றிருக்கிறேன், எப்போதும் அதைப் பாராட்டியிருக்கிறேன். ஆனால் கண்ணியம்தான் முதலில். இந்திய தீவுகளுக்கு சென்று நமது சொந்த சுற்றுலாவை ஆதரிப்பது என்று முடிவு செய்வோம்" என்று கூறியுள்ளார்.

சல்மான் கான் வெளியிட்டுள்ள பதிவில், "எங்கள் பிரதமர் நரேந்திர மோடியை லட்சத்தீவின் அழகான, தூய்மையான மற்றும் பிரமிக்க வைக்கும் கடற்கரைகளில் பார்ப்பது மிகவும் அருமையாக இருக்கிறது. மேலும் சிறந்த அம்சம் என்னவென்றால், அது எங்கள் இந்தியாவில் உள்ளது" என்று கூறியுள்ளார்.

ஷ்ரத்தா கபூர் வெளியிட்டுள்ள பதிவில், "லட்சத்தீவுகள் அழகிய கடற்கரைகளை கொண்டுள்ளன. இந்த ஆண்டு ஏன் இந்திய தீவுகளுக்கு செல்லக்கூடாது?" என்று தெரிவித்து உள்ளார்.

ஜான் ஆபிரகாம், "அற்புதமான இந்திய விருந்தோம்பல், அதிதி தேவோ பவ என்ற எண்ணம் மற்றும் ஆராய்வதற்கான பரந்த கடல்வாழ் உயிரினங்கள். லட்சத்தீவு செல்ல வேண்டிய இடம்" என்று கூறியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் கடற்கரையில் கிரிக்கெட் விளையாடும் வீடியோவைப் பகிர்ந்து, "இந்தியா அழகான கடற்கரைகள் மற்றும் அழகிய தீவுகளால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. நமது அதிதி தேவோ பவ தத்துவத்துடன், நாம் ஆராய்வதற்கு நிறைய இருக்கிறது, பல நினைவுகளை உருவாக்க காத்திருக்கின்றன" என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்