சர்வாதிகார அரசை தூக்கி எறிய ஒன்றுபடுங்கள்; காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கார்கே பேச்சு
|சர்வாதிகார அரசை தூக்கிய எறிய ஒன்றுபடுங்கள். காங்கிரசின் வெற்றிக்கு உயர் முன்னுரிைம அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கார்கே பேசினார்.
2-வது நாள் கூட்டம்
மாற்றியமைக்கப்பட்ட காங்கிரஸ் காரிய கமிட்டியின் 2 நாள் கூட்டம், தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் முன்தினம் தொடங்கியது. 2-வது நாள் கூட்டம் இன்று நடந்தது. நாடாளுமன்ற தேர்தல், 5 மாநில சட்டசபை தேர்தல் ஆகியவற்றை சந்திப்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தேர்தலுக்கான வியூகம் வகுக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சர்வாதிகார அரசு
இன்றைய கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:-
பிரதமர் மோடி, அடிப்படை பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பி வருகிறார். மும்பையில், 'இந்தியா' கூட்டணி கூட்டம் நடந்தபோது, அவர் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை ஆராய ஒரு குழுவை அமைத்தார். அனைத்து மரபுகளையும் மீறி அக்குழுவில் முன்னாள் ஜனாதிபதியையும் சேர்த்தார். இது நாம் ஓய்வெடுப்பதற்கான நேரம் அல்ல. நமது ஜனநாயகத்தை காப்பாற்ற இந்த சர்வாதிகார அரசை தூக்கி எறிய ஒன்றுபட வேண்டும்.
புகார் கூறக்கூடாது
மக்கள், மாற்று அரசை எதிர்பார்க்கிறார்கள். கர்நாடகா, இமாசலபிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் பெற்ற வெற்றிகள், இதை உணர்த்துகிறது. தனிப்பட்ட நலன்களை ஒதுக்கிவிட்டு, நாம் ஓய்வின்றி பணியாற்ற ேவண்டும். தனிப்பட்ட கருத்துவேறுபாடுகளை ஒதுக்கி தள்ளிவிட்டு, காங்கிரசின் வெற்றிக்கு உயர் முன்னுரிமை அளிக்க வேண்டும். பிற நிர்வாகிகள் மீதோ, கட்சி மீதோ புகார் தெரிவிக்க ஊடகங்களிடம் செல்லக்கூடாது.
கட்சி ஒற்றுமைக்கு உயர் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஒற்றுமை மற்றும் ஒழுக்கத்தால்தான் நமது எதிரிகளை தோற்கடிக்க முடியும். கர்நாடகாவில், நாம் அனைவரும் ஒற்றுமையுடனும், ஒழுக்கத்துடனும் போட்டியிட்டதால்தான் வெற்றி கிடைத்தது.
நமது இலக்கு
2024 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிப்பதே நமது இலக்காக இருக்க வேண்டும். அப்படி தோற்கடித்து, மாற்று அரசு அமைக்க விடாமுயற்சியுடன் பணியாற்றுவோம். 2024-ம் ஆண்டு, மகாத்மா காந்தி காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நூற்றாண்டு ஆகும். பா.ஜனதாவை ஆட்சியில் இருந்து இறக்குவதுதான் மகாத்மாவுக்கு நாம் செலுத்தும் உரிய மரியாதை. தெலுங்கானாவில் இருந்து நாம் புதிய வலிமையுடனும், தெளிவான செய்தியுடனும் செல்கிறோம். புதிய உறுதிப்பாட்டுடன் ஐதராபாத்தை விட்டு புறப்படுவோம்.
வேடிக்கை பார்க்க முடியாது
தெலுங்கானாவில் மட்டுமின்றி, வரவிருக்கும் அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெறுவோம், பா.ஜனதா ஆட்சியின் ெகாடுமையில் இருந்து மக்களை விடுவிப்போம் என்ற உறுதிப்பாட்டுடன் செல்வோம். தேர்தலை சந்திக்க மண்டல, வட்டார, மாவட்ட அளவிலான காங்கிரஸ் கமிட்டிகள் தயாராக இருக்கிறதா என்று மாநில தலைவர்களை கேட்க விரும்புகிறேன். வேட்பாளர்களை அடையாளம் கண்டுவிட்டீர்களா?
பா.ஜனதாவின் 10 ஆண்டு ஆட்சியில் சாமானியர்கள் சந்திக்கும் சவால்கள், பெருகி விட்டன. ஏழைகளின் பிரச்சினைகள் மீது மோடி கவனம் செலுத்துவது இல்லை. அவர் தன்னை தாண்டி யாரையும் பார்ப்பது இல்லை. இத்தகைய சூழ்நிலையில், நாம் வெறுமனே வேடிக்கை பார்க்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
ராகுல்காந்தி
கூட்டத்தில், ராகுல்காந்தி பேசியதை காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் பவன் கேரா நிருபர்களிடம் தெரிவித்தார். ராகுல்காந்தி பேசியதாவது:-
காங்கிரஸ்காரர்களுக்கு கொள்கை தெளிவு இருக்க வேண்டும். பாரத மாதாவின் குரலை கேளுங்கள். மக்கள் பிரச்சினைகளை எழுப்புங்கள். பா.ஜனதாவின் பொறியில் மாட்டிக் கொள்ளாதீர்கள். அவையெல்லாம் சாமானியருக்கோ, பெண்களுக்கோ அல்லது நமக்கோ தொடர்புடைய பிரச்சினைகள் அல்ல.
இவ்வாறு அவர் பேசியதாக பவன் கேரா கூறினார்.