ஜம்முவின் மக்கள் தொகை ஏற்கனவே மாறிவிட்டது - மெகபூபா முப்தி
|காஷ்மீரிகள் மக்கள் தொகை மாற்றம் குறித்த அச்சத்தில் உள்ளோம் என்று மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி இன்று ஜம்முவில் கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
அப்போது அவர் பேசுகையில், நாங்கள் காஷ்மீரிகள் மக்கள் தொகை மாற்றம் (demographic change) குறித்த அச்சத்தில் உள்ளோம். ஆனால், ஜம்முவில் ஏற்கனவே மக்கள் தொகை மாற்றம் நடந்துவிட்டது.
ஜம்மு-காஷ்மீரை பாஜக நேரடியாக பல ஆண்டுகள் ஆட்சி செய்து வருகிறது. டோக்ரா சமுகத்தை சேர்ந்த நபரை கவர்னராக நியமிக்க வாய்ப்புகள் இருந்தபோதும் பாஜக அதை செய்யவில்லை. வெளி ஆட்களை பாஜக இங்கு கொண்டு வருகிறது.
நாடு முழுவதும் செயல்படுத்தக்கூடிய திட்டங்களுக்கான பரிசோதனை கூடமாக ஜம்மு-காஷ்மீரை பாஜக பயன்படுத்துகிறது.
ஏதோ ராஜியம் என்ற கனவில் இருந்து ஜம்மு மக்கள் விழித்துக்கொள்ள்வேண்டுமென நான் கேட்டுக்கொள்கிறேன். உண்மை என்னவென்றால் தங்களுக்கு வாக்களிக்காத இந்து மதத்தினரை இஸ்லாமிய மதத்தினரை விட மோசமான சூழ்நிலையை சந்திக்க வைத்து இந்தியாவை பாஜக ராஜியமாக மாற்ற பாஜக முயற்சிக்கிறது.
நீங்கள் நாட்டையும், ஜம்மு காஷ்மீரையும் காப்பாற்றவேண்டுமென்றால் எந்த விதமான கோஷங்களாலும் தவறாக வழிநடத்தப்படாமல் நீங்கள் எழுந்து உங்கள் உரிமைக்காக போராட வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட மதத்தினரை திருப்திபடுத்தவே ஜம்மு-காஷ்மீரில் குறிப்பிட்ட ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது' என்றார்.