< Back
தேசிய செய்திகள்
மத்திய ரெயில்வே மந்திரி பதவி விலக வேண்டும் - காங்கிரஸ் வலியுறுத்தல்
தேசிய செய்திகள்

'மத்திய ரெயில்வே மந்திரி பதவி விலக வேண்டும்' - காங்கிரஸ் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
18 Jun 2024 12:07 PM GMT

ரெயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரெயில்வே மந்திரி அஷ்விணி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

புதுடெல்லி,

மேற்கு வங்காளத்தில் நடந்த ரெயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரெயில்வே மந்திரி அஷ்விணி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் சுப்ரியா ஸ்ரீனேட் செய்தியாளர்களிடம் பேசியதாவது;-

"கடந்த 10 ஆண்டுகளில், ரெயில் பயணம் என்பது நாட்டிலேயே மிகவும் பாதுகாப்பற்ற போக்குவரத்து முறையாக மாறியுள்ளது. இது குறித்து பிரதமர் மோடிக்கோ அல்லது அவரது மந்திரிகளுக்கோ எந்த சிந்தனையும் இல்லை.

மோடி ஆட்சியில் ரெயில் விபத்துகள் அதிகரித்துள்ளன. சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு, பாலசோர் ரெயில் விபத்தில் 296 பேர் கொல்லப்பட்டனர், 900-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இப்போது மேற்கு வங்காளத்தில் மற்றொரு ரெயில் விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 40 பேர் காயமடைந்துள்ளனர்.

மோடியின் ஆட்சியில் 1,117 ரெயில் விபத்துகள் நிகழ்ந்துள்ளன. அதாவது ஒவ்வொரு மாதமும் சராசரியாக 11 விபத்துகள் அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு விபத்து நிகழ்கிறது. மத்திய ரெயில்வே மந்திரி 'கவாச்' தொழில்நுட்பம் குறித்து பேசியிருந்தார். மேற்கு வங்காள ரெயில் விபத்தில் அந்த தொழில்நுட்பம் எங்கே போனது?

முன்னதாக, லால் பகதூர் சாஸ்திரி, நிதிஷ் குமார், மாதவராவ் சிந்தியா, மம்தா பானர்ஜி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், மது தாண்டாவதே போன்ற மந்திரிகள் ரெயில் விபத்துகளுக்கு தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்துள்ளனர். மேற்கு வங்காள ரெயில் விபத்துக்கு பொறுப்பேற்று ரெயில்வே மந்திரி பதவியை அஷ்விணி வைஷ்ணவ் ராஜினாமா செய்ய வேண்டும். ஆனால், ஏற்கனவே பதவியில் இருந்து நீக்கப்பட்டிருக்க வேண்டிய மந்திரிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு பதவி உயர்வு அளிக்கப்படுகிறது என்பதுதான் யதார்த்தம்."

இவ்வாறு சுப்ரியா ஸ்ரீனேட் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்