< Back
தேசிய செய்திகள்
விவசாயிகளுடன் 4-வது கட்ட பேச்சுவார்த்தை நடத்த மத்திய மந்திரிகள் சண்டிகர் வருகை

Image Courtesy : PTI

தேசிய செய்திகள்

விவசாயிகளுடன் 4-வது கட்ட பேச்சுவார்த்தை நடத்த மத்திய மந்திரிகள் சண்டிகர் வருகை

தினத்தந்தி
|
18 Feb 2024 8:57 PM IST

விவசாயிகளுடன் மத்திய அரசு 3 கட்டங்களாக நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.

சண்டிகர்,

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், மின்சார சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தை கைவிட வலியுறுத்தி விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு கடந்த 8, 12 மற்றும் 15-ந்தேதிகளில் 3 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் விவசாயிகள் போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விவசாயிகளுடன் 4-வது கட்டமாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை மந்திரி அர்ஜுன் முண்டா, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் ஆகியோர் சண்டிகருக்கு வருகை தந்துள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் விவசாய சங்கங்களின் தலைவர்கள் ஜக்ஜித் சிங் தலேவால், சர்வான் சிங் பந்தேர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

மேலும் செய்திகள்