மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் - மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு கோரிக்கை
|வன்முறை சம்பவங்களால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதாக மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
இம்பால்,
மணிப்பூர் மாநிலத்தில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பதற்றத்தை தணிக்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. கடந்த மே 3-ந்தேதி மணிப்பூர் மாநிலத்தில் வெடித்த வன்முறையில் 250-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் மற்றும் 1,700-க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகின. இந்த வன்முறை சம்பவங்களால் இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் சற்று இயல்பு நிலைக்கு திரும்பும் மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் மணிப்பூர் வன்முறை சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அவர் இரங்கல் தெரிவித்துள்ளார். வன்முறை சம்பவங்களால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதாகவும், ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பற்றது என்றும் அவர் கூறியுள்ளார்.