< Back
தேசிய செய்திகள்
பிரிக்ஸ் வெளியுறவு மந்திரிகளின் காணொலி கூட்டத்தில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்பு
தேசிய செய்திகள்

பிரிக்ஸ் வெளியுறவு மந்திரிகளின் காணொலி கூட்டத்தில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்பு

தினத்தந்தி
|
20 July 2023 9:29 PM IST

பிரிக்ஸ் வெளியுறவு மந்திரிகளின் காணொலி கூட்டத்தில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்று உச்சி மாநாட்டை முன்னெடுத்து செல்வதற்கான பயனுள்ள உரையாடலில் ஈடுபட்டார்.

புதுடெல்லி,

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் பங்கேற்கும் பிரிக்ஸ் நாடுகளின் 15-வது உச்சி மாநாடு வருகிற ஆகஸ்டில் தென் ஆப்பிரிக்காவில் நடத்தப்பட உள்ளது. இதனை அந்நாட்டு அதிபர் சிரில் ராமபோசா உறுதிப்படுத்தியதுடன், அதற்காக தயாராகி வருகிறார்.

கொரோனா பெருந்தொற்று நெருக்கடி மற்றும் அதனை தொடர்ந்து சர்வதேச கட்டுப்பாடுகள் ஆகியவற்றுக்கு பின்னர் முதன்முறையாக நாடுகளின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்க கூடிய முதல் உச்சி மாநாடாக அது அமையும்.

இந்த உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் புதின் பங்கேற்கமாட்டார். அவருக்கு பதிலாக ரஷிய கூட்டமைப்பு சார்பில் ரஷிய வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரவ் பங்கேற்பார் என அந்நாட்டு அதிபரின் செய்தி அறிக்கை தெரிவிக்கின்றது.

உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் படையெடுப்பு தீவிரமடைந்து உள்ள சூழலில், போரை கைவிட உலக நாடுகள் வலியுறுத்தின. சர்வதேச அமைப்புகளும் கோரிக்கை விடுத்தன. ஆனால், அதனை இரு நாடுகளும் கேட்கவில்லை. போர் நீடித்து வருகிறது.

இந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுத்த புதினை கைது செய்ய சர்வதேச குற்ற நீதிமன்றம் சார்பில் வாரண்டு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அதில், தென் ஆப்பிரிக்காவும் ஓர் உறுப்பினராக உள்ளது. அதனால், புதின் அந்நாட்டில் இருக்கும்போது, அவரை கைது செய்யும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.

இந்த சூழலில், பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்கும்படி ரஷிய அதிபர் புதினுக்கு, சிரில் ராமபோசா அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், பிரிக்ஸ் நாடுகளுக்கான வெளியுறவு மந்திரிகளின் காணொலி கூட்டத்தில் இன்று பங்கேற்றார். இதில், பிரேசில், ரஷியா, சீனா மற்றும் தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த வெளியுறவு மந்திரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பிரிக்ஸ் நாடுகளின் கொள்கைகளை முன்னெடுத்து செல்வதற்கான மற்றும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டுக்கான கூட்டத்திற்கு தயாராவதற்கான பயனுள்ள உரையாடல் நடந்தது என மத்திய வெளியுறவு அமைச்சக டுவிட்டர் பதிவு தெரிவிக்கின்றது.

மேலும் செய்திகள்