< Back
தேசிய செய்திகள்
நேபாள வெளியுறவு செயலாளருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு
தேசிய செய்திகள்

நேபாள வெளியுறவு செயலாளருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

தினத்தந்தி
|
28 Feb 2024 8:07 AM IST

நம்முடைய இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை பற்றி அவர் கூற கேட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினேன் என மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

நேபாள நாட்டின் வெளியுறவு செயலாளரான சீவா லம்சல் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக புதுடெல்லி வந்தடைந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை, மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் நேற்று வரவேற்று பேசினார்.

மராட்டியத்தின் புனே நகரில் 29-ந்தேதி முதல் மார்ச் 2-ந்தேதி வரையிலான நாட்களில் நடைபெறவுள்ள 8-வது ஆசிய பொருளாதார பேச்சுவார்த்தையில் லம்சல் கலந்து கொள்ள இருக்கிறார். இதற்காக நாளை நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கிறார் என நேபாள நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

அவரது இந்த வருகையை அடுத்து, மத்திய மந்திரி ஜெய்சங்கர் அவரை நேரில் சந்தித்து பேசினார். இதுபற்றி எக்ஸ் சமூக ஊடகத்தில் மத்திய மந்திரி வெளியிட்ட செய்தியில், நேபாள வெளியுறவு செயலாளர் சீவா லம்சலை, டெல்லியில் வரவேற்றதற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.

நம்முடைய இரு நாடுகளின் இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை பற்றி அவர் கூற கேட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினேன் என தெரிவித்து உள்ளார்.

நேபாள வெளியுறவு செயலாளர் சீவா லம்சலின் இந்த பயணத்தின்போது, அவர் இந்திய வெளியுறவு செயலாளர் வினய் மோகன் குவத்ராவை டெல்லியில் சந்தித்து பேசுகிறார். இதன்பின்னர் மார்ச் 1-ந்தேதி நேபாள நாட்டுக்கு புறப்பட்டு செல்கிறார்.

மேலும் செய்திகள்