< Back
தேசிய செய்திகள்
சுவீடன் உள்பட 3 நாடுகளுக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் 6 நாட்கள் சுற்றுப்பயணம்
தேசிய செய்திகள்

சுவீடன் உள்பட 3 நாடுகளுக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் 6 நாட்கள் சுற்றுப்பயணம்

தினத்தந்தி
|
11 May 2023 5:06 PM IST

சுவீடன் உள்பட 3 நாடுகளுக்கு மத்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

புதுடெல்லி,

இந்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் வங்காளதேசம், சுவீடன் மற்றும் பெல்ஜியம் ஆகிய 3 நாடுகளுக்கு இன்று முதல் 6 நாட்கள் வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இதுபற்றி வெளியிட்ட அறிவிப்பில், மத்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர், மே மாதம் 11 மற்றும் 12 ஆகிய நாட்களில் வங்காளதேசத்திற்கு முதலில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.

அதன்பின் சுவீடன் நாட்டில் மே 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை சுற்றுப்பயணம் செய்கிறார். இந்த பயணத்தில், ஐரோப்பிய யூனியனின் இந்தோ-பசிபிக் மந்திரிகள் கூட்டமைப்பு கூட்டத்தில் அவர் பங்கேற்க இருக்கிறார்.

இதன் ஒரு பகுதியாக பல்வேறு நாடுகளின் வெளியுறவு துறை மந்திரிகளுடன் அவர் இருதரப்பு கூட்டங்களை நடத்துகிறார். சுவீடனில் முக்கிய தலைவர்கள் மற்றும் மந்திரிகளை சந்தித்து பேசுகிறார்.

இந்திய முத்தரப்பு மாநாட்டில் (இந்தியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா) சுவீடன் வெளியுறவு மந்திரியுடன் சேர்ந்து அவரும் பங்கேற்க உள்ளார்.

இதன்பின் பெல்ஜிய நாட்டு பயணத்தில், பிரஸ்செல்ஸ் நகரில் பெல்ஜியம் மற்றும் ஐரோப்பிய யூனியன் அதிகாரிகளுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்துகிறார்.

அதனுடன், இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையேயான வர்த்தகம் மற்றும் தொழில் நுட்ப கவுன்சிலுக்கான முதல் மந்திரிகள் கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ள இருக்கிறார். இந்த கூட்டம் ஆனது, வருகிற 16-ந்தேதி நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த கூட்டத்தில், வர்த்தகம் மற்றும் தொழில் துறை, நுகர்வோர் விவகாரம் மற்றும் உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளி துறைக்கான மத்திய மந்திரி பியூஷ் கோயல் மற்றும் ரெயில்வே, தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பம் ஆகிய துறைகளுக்கான மத்திய மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

மேலும் செய்திகள்