இயற்கை பேரிடர்களால் ஏற்படும் மனிதப் பாதிப்பை குறைப்பதற்கான உத்திகளை வகுப்பது அவசியமாகும் - மத்திய இணை மந்திரி ஜிதேந்திர சிங்
|இயற்கை பேரிடர்களால் ஏற்படும் மனிதப் பாதிப்பை குறைப்பதற்கான உத்திகளை வகுப்பது அவசியமாகும் என மத்திய இணை மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இயற்கை பேரிடர்களால் ஏற்படும் மனிதப் பாதிப்பை குறைப்பதற்கான உத்திகளை வகுப்பது அவசியமாகும் என்று பூமிக்கு ஆபத்துகள் என்ற இரண்டு நாள் இந்திய-பிரிட்டன் பயிலரங்கை தொடங்கி வைத்து உரையாற்றிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்வு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
புதுடெல்லி பிரிட்டிஷ் தூதரகத்தின் இந்தியாவுக்கான பிரிட்டிஷ் துணை தூதர் கிறிஸ்டியானா ஸ்கார்ட் தலைமையிலான பிரதிநிதிகள் பங்கேற்ற பயிலரங்கில், இந்திய தரப்பில் புவி அறிவியல் அமைச்சக செயலர் எம்.ரவிச்சந்திரன், புவியியல் தேசிய மைய இயக்குனர் ஓ.பி.மிஸ்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய இணை மந்திரி ஜிதேந்திர சிங், பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின் பேரில் புவி அறிவியல் அமைச்சகம் 37 புதிய ஆய்வு மையங்களை கடந்த 2 ஆண்டுகளில் உருவாக்கியுள்ளதாக கூறினார். தற்போது நாடு முழுவதும் 152 மையங்கள் இயங்கி வருவதாகவும், அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 100 மையங்களை திறக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.