'ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக மத்திய அரசு சட்டம் கொண்டு வருவது அவசியம்' - மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்
|ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக மத்திய அரசு சட்டம் கொண்டு வருவது அவசியம் என்று மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
புதுடெல்லி,
ஆன்லைன் சூதாட்டம் உள்ளிட்ட விளையாட்டுகளில் பலர் தங்கள் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், அதற்கு தடை விதிப்பது தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இது தொடர்பாக தமிழக சட்டசபையில் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டு, ஒப்புதலுக்காக கவர்னர் ஆர்.என்.ரவியிடம் வைக்கப்பட்டது. ஆனால் அந்த சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளித்து கவர்னர் கையெழுத்திடவில்லை. பின்னர் அந்த மசோதா மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் நாடாளுமன்ற மக்களவையில் இன்று தி.மு.க. எம்.பி. சுமதி தமிழச்சி, ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்து பேசினார்.
அப்போது அவர், ஆன்லைன் சூதாட்டம் மாநில எல்லைகளை கடந்த பிரச்சினை என்பதால், இது தொடர்பாக மத்திய அரசு சட்டம் கொண்டு வருவது அவசியம் என்று தெரிவித்தார். ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க நாடு முழுவதும் அமல்படுத்தும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டு வரும் என்று அவர் கூறினார்.