புதிய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உடன் மத்திய சட்டத்துறை மந்திரி சந்திப்பு
|சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டை மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ சந்தித்து பேசினார்.
புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி யு.யு.லலித் நேற்று ஓய்வுபெற்றார். அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட்டை கடந்த மாதம் 11-ந்தேதி மத்திய அரசுக்கு பரிந்துரைத்தார். அதையடுத்து, டி.ஒய்.சந்திரசூட்டை தலைமை நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த மாதம் 17-ந்தேதி உத்தரவிட்டார்.
இதனையடுத்து, சுப்ரீம் கோர்ட்டின் 50-வது தலைமை நீதிபதியாக சந்திரசூட் பொறுப்பேற்றார். டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டை மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ சந்தித்து பேசினார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், இந்தியாவின் 50-வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட டாக்டர் டி.ஒய். சந்திரசூட்டை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். நெருங்கிய ஒருங்கிணைப்புடன் பணியாற்றவும், குடிமக்களுக்கு விரைவாக நீதி வழங்கப்படுவதை உறுதி செய்வதில் ஆதரவை வழங்கவும் ஆவலுடன் உள்ளேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.