முலாயம் சிங் யாதவ்-க்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா..!
|முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
புதுடெல்லி,
சமாஜ்வாடி கட்சியின் நிறுவனரும் உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான முலாயம் சிங் யாதவ் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 82. யாதவ் ஆகஸ்ட் மாதம் முதல் குருகிராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் முலாயம் சிங் யாதவின் இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், குருகிராமில் உள்ள மருத்துவமனையில் உபி முன்னாள் முதல்-மந்திரி முலாயம் சிங் யாதவின் உடலுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது மகன் அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை சந்தித்து அமித்ஷா ஆறுதல் கூறினார்.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "முலாயம் சிங் யாதவின் மறைவால் உத்தரப்பிரதேசம் மற்றும் இந்திய அரசியலில் பெரும் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.