புகார்கள் வந்தால் வருமான வரி அதிகாரிகள் மீது உடனடி ஒழுங்கு நடவடிக்கை - நிர்மலா சீதாராமன்
|வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கான புகார்கள் வந்தால், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியத்தை நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டார்.
வருமான வரித்துறையின் கொள்கை முடிவு எடுக்கும் உயரிய அமைப்பான மத்திய நேரடி வரிகள் வாரியத்துடன் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆய்வு கூட்டம் நடத்தினார்.
வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கையை அதிகரித்தல், தாமதத்துக்கு மன்னிப்பு கோரும் விண்ணப்பங்களை முடித்து வைத்தல், வருமான வரி சட்டத்தின் சில பிரிவுகளின்கீழ் வரிவிலக்கு அளித்தல் போன்றவை பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.
புதிய டி.டி.எஸ். சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதால், வரிக்கழிவு பெறுவோர் எண்ணிக்கை 6 ஆண்டுகளில் இருமடங்காக உயர்ந்து விட்டதாக நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டினார்.
வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கான புகார்கள் வந்தால், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியத்தை அவர் கேட்டுக்கொண்டார்.
அதுபோல், வரி செலுத்துவோர் தாக்கல் செய்யும் அனைத்து விண்ணப்பங்கள் மீதும் குறிப்பிட்ட காலத்துக்குள் உரிய நவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். விண்ணப்பங்களை முடித்து வைக்க காலக்கெடு நிர்ணயிக்குமாறும் தெரிவித்தார்.