'பொது சிவில் சட்டம் இந்திய தத்துவத்திற்கு எதிரானது' - மேகாலயா முதல்-மந்திரி கருத்து
|பன்முகத்தன்மையே நமது நாட்டின் பலம் என்று மேகாலயா முதல்-மந்திரி கான்ராட் சங்மா தெரிவித்தார்.
ஷில்லாங்,
போபாலில் பா.ஜ.க. நிர்வாகிகளுக்கான பயிற்சி கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டு மக்கள் அனைவரும் சமம் என அரசியல் சாசனம் கூறுவதால், நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது அவசியம். ஆனால், பொது சிவில் சட்ட விவகாரத்தில் சிலர் தவறான கருத்துகளை பரப்பி, மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்'' என்று தெரிவித்திருந்தார்.
பிரதமரின் பேச்சு குறித்து பல்வேறு தரப்பினர் ஆதரவாகவும், எதிர் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பொது சிவில் சட்டம் குறித்து தேசிய மக்கள் கட்சியின் தலைவரும், மேகாலயா முதல்-மந்திரியுமான கான்ராட் சங்மா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"வடகிழக்கு ஒரு தனித்தவமான கலாச்சாரம் மற்றும் சமூக அமைப்பைக் கொண்டது. நாங்கள் அப்படியே இருங்க விரும்புகிறோம். உதாரணமாக நாங்கள் தாய்வழிச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அதுவே எங்களுக்கான பலமாகவும் கலாச்சாரமாகவும் இருந்து வருகிறது. தற்போது அதனை மாற்ற முடியாது.
பன்முகத் தன்மையே நமது கலாச்சாரம், அதுவே நமது பலம். தற்போதைய சூழலில் பொது சிவில் சட்டம் இந்திய தத்துவத்திற்கு எதிரானது. இருப்பினும் சட்ட வரைவின் உண்மையான விஷயங்களை பார்க்காமல் அது குறித்த விவரங்களைக் கூறுவது கடினம்" என்று தெரிவித்தார்.