இந்தியாவில் பொது சிவில் சட்டம் - மத்திய சட்ட ஆணையம் கருத்து கேட்பு
|பொது சிவில் சட்டத்தை உருவாக்குவது தொடர்பான கருத்து கேட்கும் நடவடிக்கையை 22-வது இந்திய சட்ட ஆணையம் தொடங்கியுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த 150 ஆண்டுகளாக பொது கிரிமினல் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி கிரிமினல் குற்றங்கள் தொடர்பான சட்டங்கள் சாதி, மத, மொழி வேறுபாடு இல்லாமல் அனைத்து மக்களுக்கும் பொதுவானதாக உள்ளது.
ஆனால் திருமணம், விவாகரத்து, ஜீவனாம்சம், சொத்துரிமை, பாகப்பிரிவினை, குழந்தையை தத்தெடுத்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்கான பொது சிவில் சட்டத்தை உருவாக்குவதில் பல்வேறு சிக்கல்களும், எதிர்ப்புகளும் நிலவுகின்றன.
இந்து தனி நபர் சட்டம், கிறிஸ்தவ தனி நபர் சட்டம், இஸ்லாமிய தனி நபர் சட்டம் உள்ளிட்ட பல்வேறு மத ரீதியான தனி நபர் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட மத ரீதியான சட்டங்கள், பெண்களின் உரிமைகளை பல அம்சங்களில் நசுக்குவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
எனவே இதை சீர்ப்படுத்த பொது சிவில் சட்டத்தை உருவாக்கி அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு பெண் உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. அனைத்து மதத்தினருக்கும் பொதுவான பொது சிவில் சட்டம் பிரான்ஸ், அமெரிக்கா போன்ற பல்வேறு வளர்ந்த நாடுகளில் நடைமுறையில் உள்ளது.
இந்த நிலையில் 22-வது இந்திய சட்ட ஆணையம் பொது சிவில் சட்டத்தை உருவாக்குவது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மத நிறுவனங்களிடம் இருந்து கருத்து கேட்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. முன்னதாக 21-வது இந்திய சட்ட ஆணையம் பொது சிவில் சட்டம் தொடர்பான கருத்து கேட்பை 2018-ம் ஆண்டு நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.