< Back
தேசிய செய்திகள்
அதிகார மாற்றத்தின் அடையாளமான செங்கோல் நேரு இல்லத்தில் கைத்தடியாக வைக்கப்பட்டிருந்தது; காங்கிரஸ் மீது மோடி கடும் தாக்கு
தேசிய செய்திகள்

அதிகார மாற்றத்தின் அடையாளமான 'செங்கோல்' நேரு இல்லத்தில் கைத்தடியாக வைக்கப்பட்டிருந்தது; காங்கிரஸ் மீது மோடி கடும் தாக்கு

தினத்தந்தி
|
28 May 2023 1:38 AM IST

புதிய நாடாளுமன்ற திறப்புவிழாவையொட்டி நேற்று டெல்லியில் தனது வீட்டில் தமிழக ஆதீனங்களிடம் இருந்து செங்கோலை பிரதமர் நரேந்திர மோடி பெற்றார்.

செங்கோலின் முக்கியத்துவம்

அப்போது அவர் பேசுகையில், '1947-ம் ஆண்டு ஆங்கிலேயரிடம் இருந்து அதிகார மாற்றத்தின் புனித அடையாளமாக விளங்குவதால் மட்டும் செங்கோல் முக்கியத்துவம் பெறவில்லை. ஆங்கில ஆட்சிக்கு முந்தைய இந்தியாவையும், எதிர்கால சுதந்திர இந்தியாவையும் இணைத்ததாலும் அது முக்கியத்துவம் பெற்றது. சுதந்திரத்துக்கு பின் செங்கோலுக்கு உரிய கவுரவம், மரியாதை அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பிரயாக்ராஜில் உள்ள ஆனந்த பவனத்தில் (நேரு குடும்பத்தின் இல்லம்) அது ஒரு கைத்தடி (வாக்கிங் ஸ்டிக்) போல காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

பெருமகிழ்ச்சி

உங்கள் சேவகர்களும், மத்திய அரசும், பிரயாக்ராஜின் ஆனந்த பவனத்தில் இருந்து செங்கோலை வெளியே கொண்டுவந்துள்ளோம். தற்போது, இந்தியாவின் மாபெரும் பாரம்பரியத்தின் அடையாளமான செங்கோல், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்படுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழ்நாட்டின் பங்கு

நம் நாட்டின் சுதந்திர போராட்டத்தில் தமிழ்நாடு ஆற்றிய முக்கியமான பங்கை நாம் அனைவரும் அறிவோம். ஒவ்வொரு காலத்திலும், இந்திய தேசியத்தின் மையமாக தமிழகம் திகழ்ந்துள்ளது. தமிழக மக்கள் எப்போதும் சேவை உணர்வு கொண்டவர்கள். இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழ்நாட்டு மக்கள் ஆற்றிய பங்குக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படாதது துரதிர்ஷ்டவசமானது. பா.ஜ.க. இந்த விஷயத்தை மிக முக்கியமாக எழுப்ப தொடங்கியுள்ளது. மாபெரும் தமிழ் பாரம்பரியத்துக்கு உரிய மரியாதை அளிக்கப்படாததை தற்போது நாட்டு மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.'

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்