< Back
தேசிய செய்திகள்
இந்தியாவின் பழமையான ரெயில் நிலையத்திற்கு யுனெஸ்கோ விருது
தேசிய செய்திகள்

இந்தியாவின் பழமையான ரெயில் நிலையத்திற்கு யுனெஸ்கோ விருது

தினத்தந்தி
|
25 July 2023 8:49 AM IST

இந்தியாவில் 169 ஆண்டுகள் பழமையான ரெயில் நிலையத்திற்கு யுனெஸ்கோவின் ஆசிய பசிபிக் கலாசார பாரம்பரிய விருது வழங்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவின் மத்திய மும்பை நகரில் பைகுல்லா பகுதியில் 169 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரெயில் நிலையம் ஒன்று உள்ளது. எனினும், அதனை புதுப்பொலிவு பெற செய்யும் நோக்கில் பைகுல்லா ரெயில் நிலைய மீட்டெடுக்கும் பணி கொரோனா பெருந்தொற்று நாட்டில் பரவுவதற்கு முன்பு 2018-ம் ஆண்டில் தொடங்கியது.

இந்த பணியில் ஏறக்குறைய 650 தொழிலாளர்கள் மற்றும் பலர் ஈடுபட்டனர். கடந்த 5 ஆண்டுகளாக கடின உழைப்பால் இந்த ரெயில் நிலையம் மீட்டெடுக்கப்பட்டு, புதுப்பொலிவை பெற்றுள்ளது.

இதற்கான திட்ட பணிகளை தொடங்கி, முயற்சியில் ஈடுபட்ட 3 பெண்களுக்கு மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், யுனெஸ்கோவின் ஆசிய பசிபிக் கலாசார பாரம்பரிய விருது வழங்கினார்.

இந்த பணியில் ஈடுபட்ட 3 பெண்களில் ஒருவரான பா.ஜ.க.வை சேர்ந்த எம்.பி. ஷாய்னா என்.சி. கூறும்போது, 169 ஆண்டுகள் பழமையான சிற்பம் மற்றும் தோற்றங்கள் ஆகியவற்றை மீட்டெடுப்பதற்கான பணியை தொடங்கும்போது முற்றிலும் சிரமம் ஏற்பட்டது.

ஆனால், வரலாற்று நினைவு சின்ன மீட்பு பணியில் வெற்றி பெற்றிருக்கிறோம். கடந்த 5 ஆண்டுகளாக மேற்கொண்ட கடின உழைப்பே இதற்கு காரணம். ரெயில் நிலையத்தில் உள்ள மணி, இருக்கைகள் அல்லது அதன் தோற்றம் என ஒவ்வொரு விசயமும் மீட்கப்பட்டு உள்ளது.

யுனெஸ்கோவின் ஆசிய பசிபிக் கலாசார பாரம்பரிய விருதும் இன்று கிடைத்துள்ளது. உண்மையில் இது நமது நாட்டுக்கான ஒரு பெரிய சாதனை. மும்பை மக்களின் அன்புக்காக நாங்கள் இதனை செய்துள்ளோம் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்