< Back
தேசிய செய்திகள்
நாடாளுமன்ற அத்துமீறலுக்கு வேலையில்லா திண்டாட்டமும், விலைவாசி உயர்வுமே காரணம் - ராகுல் காந்தி
தேசிய செய்திகள்

நாடாளுமன்ற அத்துமீறலுக்கு வேலையில்லா திண்டாட்டமும், விலைவாசி உயர்வுமே காரணம் - ராகுல் காந்தி

தினத்தந்தி
|
16 Dec 2023 10:39 PM IST

நாடாளுமன்ற பாதுகாப்பில் குறைபாடு நேர்ந்திருப்பதால் அரசு தரப்புக்கு எங்கள் கவலையைத் தெரிவித்துள்ளோம் என்று ராகுல் காந்தி கூறினார்.

நாடாளுமன்ற மக்களவையில் கடந்த 13-ந் தேதி பார்வையாளர் மாடத்தில் இருந்து குதித்த 2 பேர் வண்ண புகைக்குண்டுகளை வீசினர். அதேநேரத்தில் நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் ஒரு பெண் உள்பட 2 பேர் வண்ண புகை குண்டுகளை வீசி அதிர்ச்சியை கிளப்பினர்.

'சர்வாதிகாரத்தை அனுமதிக்கமாட்டோம்' என்பன போன்ற கோஷங்களை எழுப்பிய அவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த குழுவில் உள்ள மற்றொருவரும் பின்னர் கைது செய்யப்பட்டார்.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பிய இந்த விவகாரத்தில் மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றன. குறிப்பாக இந்த சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா அறிக்கை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

நாடாளுமன்ற அத்துமீறல் குறித்து ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி " நாடாளுமன்றத்தில் ஒரு பாதுகாப்பு விதிமீறல் நடந்தது. ஆனால் ஏன் இது நடந்தது?

நாட்டின் மிகப்பெரிய பிரச்சினையே வேலையில்லா திண்டாட்டம்தான். இது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மோடியின் கொள்கைகளால் நாட்டின் இளைஞர்களுக்கு வேலை இல்லை. அவர்கள் விரக்தியின் உச்சிக்கே சென்று விட்டனர்.

எனவே நாடாளுமன்றத்தில் நடந்த அத்துமீறலின் பின்னணியில் விலைவாசி உயர்வும், வேலையில்லா திண்டாட்டமுமே உள்ளது. இந்தப் பிரச்னைகளில் அரசு கவனம் செலுத்தி இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும்" என வலியுறுத்தினார்.

மேலும் செய்திகள்