< Back
தேசிய செய்திகள்
சபரிமலையில் தற்போது அமைதியான சூழல் நிலவி வருகிறது: முதல்-மந்திரி பினராயி விஜயன் விளக்கம்
தேசிய செய்திகள்

சபரிமலையில் தற்போது அமைதியான சூழல் நிலவி வருகிறது: முதல்-மந்திரி பினராயி விஜயன் விளக்கம்

தினத்தந்தி
|
15 Dec 2023 1:45 AM IST

சபரிமலை விஷயத்தில் அரசின் களப்பணிகள் மிகவும் கவனத்துடன் நடைபெற்று வருகிறது.

திருவனந்தபுரம்,

சபரிமலையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்வது வழக்கமான நிகழ்வு தான் என முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் தற்போது கூட்டம் அலைமோதி வருவதால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பக்தர்கள் கடும் அவதி அடைவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. பாதுகாப்பு குளறுபடியே இதற்கு காரணம் என காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சியினர் ஆளும் அரசு மீது குற்றம்சாட்டினர்.

இந்தநிலையில் கோட்டயத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சபரிமலை விஷயத்தில் அரசின் களப்பணிகள் மிகவும் கவனத்துடன் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சபரிமலையில் தற்போது அமைதியான சூழல் நிலவி வருகிறது. கடந்த ஆண்டு சபரிமலை சீசனையொட்டி பாதுகாப்பு பணிக்கு 16,070 போலீசார் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த ஆண்டு 16,120 பேர் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்கிறார்கள். பாதுகாப்பில் எந்தவித மாற்றமும் செய்யவில்லை.

அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக ரூ.108 கோடியில் செங்கன்னூர், கழக் கூட்டம், சிரங்கரை, எருமேலி, நிலக்கல், மணியம் கோடு ஆகிய 6 இடங்களில் ஓய்வு மையம் அமைக்கப்பட்டு வருகிறது. சென்னை மழை வெள்ளம், தெலுங்கானா தேர்தல் காரணமாக சபரிமலை பயணத்தை ஒத்தி வைத்தவர்களும் தற்போது தரிசனத்திற்கு வர தொடங்கி இருக்கிறார்கள். கூட்ட நெரிசலுக்கு இதுவும் காரணமாக இருக்கலாம். இதையெல்லாம் கருத்தில் கொண்டு தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டது.

கடந்த சீசனில் இதே காலத்தில் சராசரியாக 62 ஆயிரம் பக்தர்கள் சபரிமலை தரிசனத்திற்கு வந்திருந்தனர். இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 88 ஆயிரமாக உயர்ந்துள்ளது. புல்மேடு, எருமேலி காட்டு பாதை வழியாக பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இவற்றிற்கு தீர்வு காணும் வகையில் அனைத்து துறைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் சபரிமலையில் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சீசன் நேரத்தில் பக்தர்கள் பல மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்வது காலம், காலமாக நடைபெறும் வழக்கமான நிகழ்வு தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்