ஐபோனுக்காக டெலிவரி பாயை கொன்று உடலை எரித்த கொடூர கஸ்டமர்
|ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐபோனுக்கு, கொடுக்க பணம் இல்லாததால், டெலிவரி பாயை கொலை செய்து எரித்து ஐபோனை அபகரித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹாசன்,
ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐபோனுக்கு, கொடுக்க பணம் இல்லாததால், டெலிவரி பாயை கொலை செய்து எரித்து ஐபோனை அபகரித்துள்ள சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறி உள்ளது.
கர்நாடகாவின் ஹாசன் மாவட்டம் அரசிகெரே பகுதியை சேர்ந்த ஹேமந்த் தத்தா என்பவர், பிளிப்கார்ட் இணையதளத்தில் 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஐபோன் ஒன்றை, கேஷ் ஆன் டெலிவரி (Cash on delivery) மூலம் ஆர்டர் செய்துள்ளார். ஐபோனை டெலிவரி செய்வதற்காக, கடந்த 7-ம் தேதி, நாயக் என்பவர், ஹேமந்த் தத்தாவின் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது கொடுக்க பணம் இல்லாததால், ஹேமந்த் தத்தா நாயக்கை கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்துள்ளார். பின்னர் உடலை வீட்டிலேயே மறைத்து வைத்திருந்தபோது, துர்நாற்றம் வீசியுள்ளது. அதன் பிறகு, உடலை சாக்கு மூட்டையில் கட்டி எடுத்துச் சென்ற ஹேமந்த் தத்தா, ஹாசன் ரெயில் நிலையத்திற்கு பின்புறம் உள்ள புதரில் வைத்து, பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்.
வேலைக்கு சென்ற நாயக், வீடு திரும்பவில்லை என அவரது சகோதரர் மஞ்சு நாயக், காவல்நிலையத்தில் புகார் அளிக்கவே, போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். செல்போன் சிக்னல் மற்றும் பிப்ரவரி 7-ம் தேதி, நாயக் டெலிவரி செய்த விவரங்களை வைத்து, ஹேமந்த் தத்தாவை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.