< Back
தேசிய செய்திகள்
ஐ.நா. அமைப்பு பழைய நிறுவனம் போன்று உள்ளது:  மத்திய மந்திரி ஜெய்சங்கர்
தேசிய செய்திகள்

ஐ.நா. அமைப்பு பழைய நிறுவனம் போன்று உள்ளது: மத்திய மந்திரி ஜெய்சங்கர்

தினத்தந்தி
|
7 Oct 2024 9:21 AM IST

ஐ.நா. அமைப்பு மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், காலமாற்றத்திற்கு ஏற்ப சீர்திருத்தங்களை மேற்கொள்ளும்படி இந்தியா சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

புதுடெல்லி,

டெல்லியில் நடந்த கவுடில்ய பொருளாதார மாநாட்டில் மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அவரிடம் மாறிவரும் உலகளாவிய சூழலில், ஐ.நா. அமைப்பின் பங்கு பற்றிய கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ஐ.நா. அமைப்பு ஒரு பழைய நிறுவனம் போன்று உள்ளது. நடப்பு நிலைமைக்கு ஏற்ப இல்லாமல் உள்ளது.

முடிவில், நமக்கு ஐ.நா. என்றொரு அமைப்பு உள்ளது. எனினும், செயல்பாட்டில் சிறந்த ஒன்றாக இல்லை. முக்கிய விவகாரங்களில் எந்தவித நடவடிக்கையும் அந்த அமைப்பு எடுக்காதபோது, நாடுகள் தங்களுடைய சொந்த முயற்சிகளை மேற்கொண்டு தீர்வுகளை காண்கின்றன.

எடுத்துக்காட்டாக, கடைசியாக 5 முதல் 10 ஆண்டுகளை பாருங்கள். நம்முடைய வாழ்க்கையில் நடந்த மிக முக்கிய நிகழ்வு கோவிட் (கொரோனா பெருந்தொற்று). கோவிட் தொற்றின்போது ஐ.நா. என்ன செய்தது? இதற்கான பதில், பெரிய அளவில் ஒன்றும் இல்லை என்றே நான் நினைக்கிறேன் என்றார்.

உலகில் இன்று 2 தீவிர மோதல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஐ.நா. எந்த இடத்தில் இருந்தது. பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் ஒரு பார்வையாளர் போன்று செயல்படுகிறது என கடுமையாக சாடியுள்ளார்.

தொடர்ந்து அவர், இந்திய-மத்திய கிழக்கு-ஐரோப்பிய பொருளாதார வழித்தடம், இந்தோ-பசிபிக் பகுதியில் குவாட் அமைப்பு மற்றும் பேரிடரில் இருந்து மீளும் உட்கட்டமைப்புக்கான கூட்டணி என சர்வதேச விசயங்களில் நாடுகள் ஒன்றிணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கி விட்டன. இவை எல்லாம் ஐ.நா. அமைப்புக்கு வெளியே ஒன்றிணைந்து செயல்பட கூடிய நாடுகளாக உள்ளன என கூறியுள்ளார்.

ஐ.நா. அமைப்பு, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை பேணுதல், தேவையானவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குதல், மனித உரிமைகளை பாதுகாப்பது மற்றும் சர்வதேச சட்டங்களை நிலைநிறுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என அதன் வலைதளத்தில் வெளியிடப்பட்டு உள்ள செய்தியில் தெரிவித்து உள்ளது.

எனினும், காலமாற்றத்திற்கு ஏற்ப, ஐ.நா. அமைப்பு மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும்படி இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

மேலும் செய்திகள்