< Back
தேசிய செய்திகள்
ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்று பேசிய பஞ்சாயத்து பெண் தலைவர்; ராஜஸ்தான் முதல்-மந்திரி பாராட்டு
தேசிய செய்திகள்

ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்று பேசிய பஞ்சாயத்து பெண் தலைவர்; ராஜஸ்தான் முதல்-மந்திரி பாராட்டு

தினத்தந்தி
|
9 May 2024 1:52 AM IST

அனைத்து பெண்களுக்கும் ஓர் உந்துதலுக்கான எடுத்துக்காட்டாக இருந்து, உலக அரங்கில் ராஜஸ்தானை நீரு யாதவ் பெருமை பெற செய்து விட்டார் என்று ராஜஸ்தான் முதல்-மந்திரி பஜன் லால் புகழ்ந்துள்ளார்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தில் சுராஜ்கார் நகரை சேர்ந்தவர் நீரு யாதவ். லம்பி சாகர் பகுதியின் பெண் பஞ்சாயத்து தலைவராக இருந்து வருகிறார்.

இந்நிலையில், ஐ.நா. ஆணையம் ஆனது, முன்னேற்ற கொள்கைக்கான குழு என்ற பெயரில் 2024-ம் ஆண்டுக்கான வருடாந்திர மாநாட்டை நடத்தியது. இதில், மக்கள் தொகை மற்றும் வளர்ச்சி மற்றும் தனித்துவ கண்டுபிடிப்புகள் பற்றிய விவரங்களை பகிர்தலை பற்றி இந்த மாநாட்டில் பேசப்பட்டது.

இதில், நீரு யாதவ் கலந்து கொண்டு பேசினார். இந்த மாநாட்டில் பேசிய நீரு யாதவ், நான் நகரத்தில் இருந்து கிராமத்திற்கு சென்றபோது, சிறுமிகள் மற்றும் பெண்களிடையே செழித்திருந்த திறமைகளை கண்டேன். அவர்களுடைய ஆற்றலை வெளிக்கொண்டு வரும் வகையில், என்னுடைய கிராமத்தில் விளையாட்டு திடல் ஒன்றை கட்டினேன்.

ஆக்கி விளையாட்டுக்கான அணி ஒன்றையும் உருவாக்கினேன். அதனால், விளையாட்டை அவர்கள் ஒரு தொழிலாக ஆக்கி கொள்ளவும் மற்றும் அவர்கள் தங்களை அதிகாரம் படைத்தவர்களாக ஆக்கி கொள்ளவும் முடியும். இதற்கான பணிகளை மேற்கொள்ளும்போது, பல சவால்களை நான் எதிர்கொண்டேன் என்றார்.

அதனை விளக்கி கூறும்போது, முதலில் உங்களை அவர்கள் தவிர்ப்பார்கள். உங்களை பார்த்து நகைப்பார்கள். உங்களுடன் போராடுவார்கள். இறுதியில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என பேசியுள்ளார்.

இதற்காக ராஜஸ்தான் முதல்-மந்திரி பஜன் லால் சர்மா மற்றும் துணை முதல்-மந்திரி தியா குமாரி ஆகிய இருவரும் நீரு யாதவுக்கு தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

அனைத்து பெண்களுக்கும் ஓர் உந்துதலுக்கான எடுத்துக்காட்டாக அவர் இருக்கிறார் என பஜன் லால் பாராட்டுகளை தெரிவித்து கொண்டார். உலக அரங்கில் ராஜஸ்தானை பெருமையடைய செய்து விட்டார் என்றும் புகழ்ந்துள்ளார்.

மேலும் செய்திகள்