< Back
தேசிய செய்திகள்
உமேஷ் பால் கொலை குற்றவாளி ஓடும் பைக்கில் வெடிகுண்டு தயாரிப்பதில் நிபுணர்; திடுக் தகவல்
தேசிய செய்திகள்

உமேஷ் பால் கொலை குற்றவாளி ஓடும் பைக்கில் வெடிகுண்டு தயாரிப்பதில் நிபுணர்; திடுக் தகவல்

தினத்தந்தி
|
19 April 2023 11:00 AM IST

உமேஷ் பால் கொலை வழக்கில் குற்றவாளியான குட்டு, ஓடும் பைக்கில் இருந்தபடி வெடிகுண்டு தயாரிக்கும் அளவுக்கு திறன் படைத்தவர் என ஆதிக் அகமதுவின் உறவினர் கூறியுள்ளார்.

பிரயாக்ராஜ்,

உத்தர பிரதேசத்தில் முன்னாள் எம்.பி. மற்றும் பிரபல ரவுடியான ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது இருவரையும் போலீசார் அழைத்து சென்றபோது மர்ம கும்பல் அவர்களை கடந்த சனிக்கிழமை சுட்டு வீழ்த்தியது.

அவர்கள் செய்தியாளர்களுடன் பேசிக்கொண்டு செல்லும்போதே ஒரு கும்பல் இருவரையும் சுடும் காட்சிகள் வீடியோவாகவும் வெளிவந்து பரபரப்பு ஏற்படுத்தின. கடந்த மாதம் ஆதிக் அகமது உள்ளிட்ட 3 பேருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ஆயுள் தண்டனையும் விதித்து பிரயாக்ராஜ் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த சம்பவம் பற்றி பிரயாக்ராஜ் மாவட்ட காவல் ஆணையாளர் ரமீத் சர்மா கூறும்போது, ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்டனர். அப்போது அவர்கள் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தனர். ஊடகக்காரர்கள் போன்று வந்த 3 பேர் திடீரென அவர்களை சம்பவ இடத்திலேயே சுட்டு கொன்றனர். இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த தாக்குதலில், கான்ஸ்டபிள் ஒருவருக்கும் துப்பாக்கி குண்டு பாய்ந்து உள்ளது என கூறினார்.

இதுபற்றிய போலீசாரின் எப்.ஐ.ஆர். பதிவில், ரவுடியாக இருந்து அரசியல்வாதியான ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரரை, நாங்கள் பிரபலமடைவதற்காக கொலை செய்தோம் என துப்பாக்கி சூடு நடத்திய 3 பேரும் கூறியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆதிக் மற்றும் அஷ்ரப் இருவரும் போலீஸ் காவலில் வைக்கப்பட்டதும், நாங்கள் நிருபர்கள் போன்று எங்களை காட்டி கொண்டோம். பத்திரிகையாளர்களுடன் சேர்ந்து ஒன்றாகவே சுற்றி வந்தோம். இரண்டு பேரையும் சுட்டு கொல்வது என முடிவு செய்தோம் என்று அந்த 3 பேரும் போலீசாரின் விசாரணையில் தெரிவித்து உள்ளனர் என எப்.ஐ.ஆர். பதிவு தெரிவிக்கின்றது.

பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா, ஐ.எஸ்.ஐ. மற்றும் தாவூத் இப்ராகிமுடன் ஆதிக் அகமதுவுக்கு தொடர்பு இருந்து உள்ளது என எப்.ஐ.ஆர். பதிவு தெரிவிக்கின்றது. ஆதிக் அளித்த வாக்குமூலம் ஒன்றில், இதனை அவரே தெரிவித்து உள்ளார்.

ஆயுதங்களை தங்களுக்கு வழங்கியவர்களின் முகவரி தங்களுக்கு தெரியம் என ஆதிக் மற்றும் அஷ்ரப் போலீசில் கூறியுள்ளனர். ஆனால், சிறையில் இருந்து கொண்டு தங்களால் அவர்களது இடம் பற்றி தெரிவிக்க முடியாது. அந்த இடத்திற்கு அழைத்து சென்றால், அது பற்றி கூற முடியும் என அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

உமேஷ் பால் கொலையில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் அந்த முகவரியில் உள்ள நபரிடம் இருந்தே பெறப்பட்டன என கூறியுள்ளனர். ஐ.எஸ். அமைப்பின் 227 எண் கொண்ட கும்பல் தலைவராக ஆதிக் செயல்பட்டு வந்து உள்ளார். அவரது சகோதரர் அஷ்ரப்பும் அதில் உறுப்பினராக இருந்து உள்ளார்.

வெளிநாட்டு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதும் பாதுகாப்பு முகமைகள் உஷார்படுத்தப்பட்டு உள்ளன. இதனால், ஆதிக்கின் பயங்கவராத செயல்கள் பற்றி தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அமைப்பும் விசாரணை நடத்த கூடிய சூழல் இருந்தது. முக்தார் அன்சாரி என்பவரின் உதவியுடன் நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமுடனும் ஆதிக் தொடர்பு ஏற்படுத்தி கொண்டு உள்ளார் என தகவல் தெரிவிக்கின்றது. இதன்பின் பாகிஸ்தான் வழியேயான ஆயுத கடத்தலில் ஆதிக் கும்பல் ஈடுபட தொடங்கி உள்ளது.

ஏ.கே. 47 ரக துப்பாக்கி, 0.45 பிஸ்டல் துப்பாக்கி, ஆர்.டி.எக்ஸ். உள்ளிட்டவற்றை ஐ.எஸ்.ஐ.யிடம் இருந்து ஆதிக் பெற்றுள்ளார். இவற்றில் 0.45 பிஸ்டல் துப்பாக்கி, உமேஷ் பால் கொலையில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. உமேஷ் பால் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் குட்டு முஸ்லிம் என்பவரும் ஒருவர். இந்த நிலையில், ஆதிக் அகமதுவின் உறவினரான முகமது ஜிஷான் என்பவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, குட்டு முஸ்லிம் வெடிகுண்டுகளை தயாரிப்பதில் திறன் படைத்தவர் என கூறியுள்ளார்.

மோட்டார் பைக் ஓடி கொண்டிருக்கும்போது, அதில் இருந்தபடியே வெடிகுண்டுகளை அவர் தயாரித்து விடுவார். அந்த அளவுக்கு வெடிகுண்டு தயாரிப்பதில் நிபுணர் அவர். இதனை எப்படி செய்வது என்று ஆதிக் அகமதுவின் அடியாட்களுக்கும் கூட அவர் கற்று தந்திருக்கிறார்.

ஒருமுறை, ஆதிக் அகமதுவின் மனைவி ஷாயிஸ்டா பர்வீனுக்கு எனது சொத்துகளை மாற்றி தரும்படி குட்டு என்னை கட்டாயப்படுத்தினார் என்றும் கூறியுள்ளார். அந்த அதிர்ச்சி அனுபவங்களை பகிர்ந்த அவர், ஆதிக் தனது மகனான அலியை என்னிடம் அனுப்பினார். அவருடன் துப்பாக்கியால் சுடும் கைதேர்ந்த 25 பேர் எனது வீட்டுக்கு வந்தனர். அதன்பின் ஆதிக் மனைவி பர்வீன் பெயரில் எனது நிலம் மாற்றி தரப்பட வேண்டும் என மிரட்டியதுடன், ரூ.5 கோடி பணம் கொடுக்க வேண்டும் என்றும் அச்சுறுத்தினர்.

ஆதிக் என்னிடம் பேச விரும்புகிறார் என்று அவரது மகன் அலி கூறினார். அப்போது அனைவரும் என்னை நோக்கி துப்பாக்கியை பிடித்தடி இருந்தனர். தொலைபேசியின் மறுமுனையில் இருந்த ஆதிக், ரூ.5 கோடி பணம் கேட்டு மிரட்டியதுடன், பர்வீன் பெயரில் நிலம் மாற்றப்பட வேண்டும் என்றும் வற்புறுத்தினார்.

அதன்பின்பு, துப்பாக்கியால் என்னை சுடும்படி ஆதிக் உத்தரவு போட்டு விட்டார். எனினும், அதில் இருந்து நான் எப்படியோ தப்பி விட்டேன் என அவர் அதிர்ச்சியுடன் கூறுகிறார். நடந்த சம்பவம் பற்றி போலீசில் எப்.ஐ.ஆர். ஒன்றை பதிவு செய்து உள்ளேன். அதன் பேரிலேயே அலி இந்த வழக்கில் சிறையில் தள்ளப்பட்டு உள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்