உக்ரைன் கல்வி நிறுவனங்கள் நேரடி வகுப்புகளை தொடங்க முடிவு: இந்திய மாணவர்கள் கவலை
|உக்ரைன் கல்வி நிறுவனங்கள் அடுத்த மாதம் முதல் நேரடி வகுப்புகளை தொடங்க முடிவு செய்துள்ளதால், அங்கிருந்து நாடு திரும்பிய இந்திய மாணவர்கள் கவலையடைந்துள்ளனர்.
புதுடெல்லி,
உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் ரஷியா போர் தொடுத்தது. எனவே அங்குள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் பயின்று வந்த இந்திய மாணவர்கள் சுமார் 20 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்பட்டனர்.
இவர்களில் பெரும்பாலானோர் மருத்துவ மாணவர்கள் ஆவர். இருநாடுகளுக்கு இடையேயான போர் சுமார் 6 மாதமாக தொடர்ந்து வரும் நிலையில், இந்த மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வருகின்றன.
உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களை இந்திய மருத்துவக்கல்லூரிகளிலேயே சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடப்பட்டது. இது தொடர்பாக அந்த மாணவர்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
ஆனால் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் பயின்று இடையில் திரும்பும் மாணவர்களை சேர்க்கும் வழிமுறை இல்லை என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெளிவுபடுத்தியது.
நேரடி தேர்வு
இந்த நிலையில் உக்ரைனின் பல கல்வி நிறுவனங்கள் அடுத்த மாதம் (செப்டம்பர்) முதல் நேரடி வகுப்புகளை தொடங்க இருப்பதாக அறிவித்து உள்ளன. அத்துடன் மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் துணை மருத்துவ படிப்புகளுக்கு நடத்தப்படும் கே.ஆர்.ஓ.கே.1 தேர்வை அக்டோபரில் நேரடியாக நடத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக மாணவர்களுக்கு சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் குறுஞ்செய்தி அனுப்பி உள்ளன. அதேநேரம் மாணவர்களின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிப்பதாக அந்த நிறுவனங்கள் கூறியுள்ளன.
ஆனால் உக்ரைன்-ரஷியா இடையேயான போர் உக்கிரமாக நடந்து வரும் நிலையில், தங்கள் பாதுகாப்பு குறித்து இந்திய மாணவர்கள் கவலை வெளியிட்டு உள்ளனர். அதேநேரம் உக்ரைன் திரும்பாவிட்டால் தங்கள் கல்வியும் பாழாகிவிடும் என்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.
நொய்டா மாணவர்கள்
உக்ரைனில் 4-ம் ஆண்டு மருத்துவம் படித்து வரும் நொய்டாவை சேர்ந்த அஸ்னா மற்றும் அவரது சகோதரர் அன்ஷ் ஆகியோர் இது குறித்து கூறுகையில், 'போர் உச்சத்தில் இருக்கும் நிலையில் உக்ரைன் திரும்புவது மிகவும் பயங்கரமானது. தலைநகர் கீவில் இயல்பு நிலை நீடிப்பதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் எதுவரை? பல்கலைக்கழகங்களுக்கு நேரடியாக செல்ல முடியாதவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு தொடருமா? என்பதிலும் உறுதி இல்லை' என்று கவலை வெளியிட்டனர்.
இதைப்போல ராஜஸ்தான், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்களும் உக்ரைன் திரும்பும் விவகாரத்தில் அச்சம் வெளியிட்டு உள்ளனர்.