என்.சி.இ.ஆர்.டி. செய்வது நியாயமானது தான் பாட புத்தக திருத்தப்பணியை கல்வியாளர்கள் எதிர்ப்பது சரியல்லபல்கலைக்கழக மானிய குழு கண்டனம்
|பாட புத்தகங்களில் என்.சி.இ.ஆர்.டி. திருத்தம் செய்வது நியாயமானதுதான். அதை கல்வியாளர்கள் எதிர்ப்பது சரியல்ல என்று பல்கலைக்கழக மானிய குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட பாடத்திட்டங்களில் பயன்படுத்தப்படும் பாட புத்தகங்களை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) வடிவமைத்து வருகிறது. கொரோனா காலத்தில் மாணவர்கள் பாடங்களை முழுமையாக படிக்க முடியாமல் அவதிப்பட்டனர்.
எனவே, பாடச்சுமையை குறைப்பதற்காக, தேவையற்ற பாடங்களை நீக்குவதற்கு என்.சி.இ.ஆர்.டி. திட்டமிட்டது. அதற்காக பிரபல கல்வியாளர்களை கொண்ட பாட புத்தக மேம்பாட்டு குழுக்கள் அமைக்கப்பட்டன. என்.சி.இ.ஆர்.டி. நீக்கிய பாடங்கள் குறித்து அரசியல்ரீதியாக சர்ச்சை ஏற்பட்டது. வரலாற்றை மாற்றும் முயற்சி என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
இதனால், சில கல்வியாளர்கள், தங்கள் பெயர் கெட்டு விடும் என்று கருதி, பாட புத்தகங்களில் இருந்து தங்கள் பெயர்களை நீக்கி விடுமாறு என்.சி.இ.ஆர்.டி.க்கு நேற்று முன்தினம் கடிதம் எழுதினர்.
அதற்கு பல்கலைக்கழக மானிய குழு (யு.ஜி.சி.) தலைவர் ஜெகதீஷ் குமார் நேற்று பதில் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
என்.சி.இ.ஆர்.டி. மேற்கொண்ட பாட புத்தக திருத்தத்துக்கு சில கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பது சரியல்ல. அவர்களது கூக்குரலுக்கு எவ்வித முகாந்திரமும் இல்லை. அவர்கள் எதிர்ப்புக்கு கல்விரீதியான காரணங்களை தவிர, வேறு காரணங்கள்தான் இருப்பதாக தோன்றுகிறது.
என்.சி.இ.ஆர்.டி., பாட புத்தகங்களில் திருத்தம் செய்வது நியாயமானதுதான். இது இப்போதுதான் முதல்முறையாக நடக்கவில்லை. கடந்த காலங்களிலும் அவ்வப்போது நடந்துள்ளது. பல்வேறு தரப்பினரின் யோசனைகளுக்கு ஏற்ப திருத்தப்படுவதாக என்.சி.இ.ஆர்.டி. கூறியுள்ளது. மேலும், தேசிய பாடத்திட்டப்படி, புதிய பாட புத்தகங்களை உருவாக்கி வருவதால், ஏற்கனவே உள்ள பாட புத்தகங்களில் திருத்தம் செய்வது தற்காலிகமானதுதான் என்றும் என்.சி.இ.ஆர்.டி. தெரிவித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.