உடுப்பி கல்லூரி வீடியோ வழக்கு - பாதிக்கப்பட்ட பெண் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம்
|பாதிக்கப்பட்ட பெண் இன்று உடுப்பி மாவட்ட கோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.
பெங்களூரு,
உடுப்பி மாவட்டம் அம்பலபாடி பகுதியில் தனியார் பாராமெடிக்கல் கல்லூரியில் படித்து வந்த 3 மாணவிகள் கல்லூரி கழிவறையில் செல்போன் கேமரா வைத்து, சக மாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், வழக்கில் முறையான விசாரணை நடத்தக் கோரி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண் முறையாக போலீசில் புகார் அளிக்க மறுப்பு தெரிவித்ததாக கூறப்படும் நிலையில், போலீசார் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய 3 பெண்கள் ஏற்கனவே கோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றுள்ளனர். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் இன்று உடுப்பி மாவட்ட கோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக அவர் அளித்த விரிவான வாக்குமூலத்தை கோர்ட்டு பதிவு செய்து கொண்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.