உடுப்பி கல்லூரி மாணவி விவகாரம்: பெங்களூருவில் பா.ஜனதா மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்
|உடுப்பி கல்லூரி கழிவறையில் வீடியோ எடுத்த விவகாரத்தை கண்டித்து பா.ஜனதா மகளிர் அணியினர் பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெங்களூரு:-
மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்
உடுப்பியில் உள்ள ஒரு கல்லூரியின் கழிவறையில் மாணவியை வீடியோ எடுத்து வெளியிட்டதாக முஸ்லிம் மாணவிகள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவர்கள் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கோரி பெங்களூரு மாநகர பா.ஜனதா மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் பெங்களூரு சுதந்திர பூங்காவில் நேற்று நடைபெற்றது.
இதில் பா.ஜனதாவின் மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டனர். அவர்கள் தங்களின் தலையில் கருப்பு துணியை கட்டி இருந்தனர். அவர்கள் கர்நாடக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி தவறு செய்த மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதில் மாநில பா.ஜனதா பொதுச் செயலாளர் என்.ரவிக்குமார் எம்.எல்.சி. கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-
வெட்கக்கேடானது
உடுப்பி கல்லூரியின் கழிவறையில் வீடியோ எடுத்து வெளியிட்டது மிக மோசமான சம்பவம். இதனால் இந்த சமூகத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. வீடியோ எடுத்து தனது தொடர்பில் உள்ளவர்களுக்கு அனுப்புவது வெட்கக்கேடானது. இதுகுறித்து போலீசார் தாமதமாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தை மூடிமறைக்க அரசு முயற்சி செய்கிறது. வீடியோ எடுத்த மாணவிகள் 3 பேரை இன்னும் கைது செய்யவில்லை. இதுகுறித்து சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு என்.ரவிக்குமார் கூறினார்.