ஆக.,31 - செப்.,1ல் மும்பையில் ‛இந்தியா' கூட்டணி கட்சிகள் கூட்டத்தை நடத்தும் உத்தவ் தாக்கரே
|மும்பையில் வருகிற 31, 1-ந் தேதிகளில் எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் கூட்டத்தை உத்தவ் தாக்கரே தலைமை தாங்கி நடத்துகிறார். இந்த கூட்டத்துக்கான முன்னேற்பாடு குறித்து தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
'இந்தியா' கூட்டணி
அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியாக திரண்டு போட்டியிட முடிவு செய்துள்ளன. இதை முன்னிட்டு கடந்த ஜூன் 23-ந் தேதி எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்தது. அந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், உத்தவ் பாலாசாகேப் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்பட 16 எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
எதிர்க்கட்சி தலைவர்களின் 2-வது கூட்டம் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கடந்த மாதம் 17 மற்றும் 18-ந் தேதிகளில் நடந்தது. கூட்டத்தில் 26 எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டன. கூட்டத்தில் எதிர்க்கட்சி கூட்டணிக்கு 'இந்தியா' என பெயர் வைக்கப்பட்டது.
மும்பையில் 3-வது கூட்டம்
இந்தநிலையில் எதிர்க்கட்சிகளின் 3-வது கூட்டம் மும்பையில் நடக்கிறது. வருகிற 31-ந் தேதி மற்றும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந் தேதிகளில் இந்த கூட்டம் நடக்கிறது. கூட்டத்தை முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி தலைமை தாங்கி நடத்த உள்ளது.
மும்பையில் எதிர்க்கட்சிகள் கூட்டத்தை நடத்துவது தொடர்பாக நேற்று 'மகாவிகாஸ் அகாடி' எனப்படும் மராட்டிய எதிர்க்கட்சி கூட்டணி ஆலோசனை கூட்டம் நடந்தியது. இந்த கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், அந்த கட்சியின் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல், தேசிய செயல் தலைவர் சுப்ரியா சுலே எம்.பி., உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சுபாஷ் தேசாய், சஞ்சய் ராவத், மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே மற்றும் அந்த கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரிகள் பிரித்விராஜ் சவான், அசோக் சவான், மூத்த தலைவர் பாலாசாகேப் தோரட், எதிர்க்கட்சி தலைவர் விஜய் வடேடிவார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
சஞ்சய் ராவத் பேட்டி
கூட்டத்துக்கு பிறகு உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் நிருபர்களிடம் கூறியதாவது:-
மும்பையில் நடைபெற உள்ள 'இந்தியா' கூட்டணி கூட்டத்தை உத்தவ் தாக்கரே நடத்த உள்ளார். கூட்டம் 2 நாட்கள் நடக்கிறது. 31-ந் தேதி எதிர்க்கட்சி தலைவர்களுக்கு விருந்து அளிக்கப்பட உள்ளது. இதில் 5 மாநில முதல்-மந்திரிகள் உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். கூட்டம் மும்பை புறநகரில் உள்ள கிராண்ட் ஹயாத் ஓட்டலில் நடைபெறும். 31-ந் தேதி மாலையும், மறுநாள் 1-ந் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரையிலும் கூட்டம் நடைபெறும். கூட்டத்துக்கு பிறகு எதிர்க்கட்சி தலைவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுவார்கள்.
வெற்றியை உறுதி செய்வோம்
ராகுல்காந்தி உள்பட கூட்டத்துக்கு வரும் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது உள்ளிட்டவைகள் தொடர்பாக மகாவிகாஸ் அகாடி கூட்டணி தலைவர்கள் மாநில அரசுடன் பேசுவார்கள். பாட்னா, பெங்களூருவை தொடர்ந்து 'இந்தியா' கூட்டணி கூட்டத்தை மும்பையிலும் வெற்றிகரமாக நடத்துவதை உறுதி செய்ய வேண்டும் என முன்னேற்பாடு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. 2 நாட்கள் கூட்டத்துக்கு ஒவ்வொரு தலைவருக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மராட்டிய காங்கிரஸ் தலைவர் நானா படோலே கூறுகையில், "இந்தியா கூட்டணி கட்சியின் கூட்டத்தை மும்பையில் வெற்றிகரமாக நடத்துவது தொடர்பாக முன்னேற்பாடு ஆலோசனை நடத்தினோம். மத்திய அரசின் சர்வாதிகாரத்தை எங்களது கூட்டணி எதிர்க்கிறது. ராகுல்காந்திக்கு எதிரான தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்தி வைத்துள்ள நிலையில் இந்த கூட்டம் நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்தது" என்றார்.