< Back
தேசிய செய்திகள்
கன்னையா லால் உடல் தகனம்: பலத்த பாதுகாப்புடன் இறுதி ஊர்வலம் நடைபெற்றது
தேசிய செய்திகள்

கன்னையா லால் உடல் தகனம்: பலத்த பாதுகாப்புடன் இறுதி ஊர்வலம் நடைபெற்றது

தினத்தந்தி
|
29 Jun 2022 3:43 PM IST

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக தனது சமூக வலைத்தளத்தில் கன்னையா லால் பதிவு செய்ததால், அவர் கொல்லப்பட்டது தெரியவந்தது.

உதய்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நேற்று கொடூரமான முறையில் கன்னையா லால் வெட்டிக்கொல்லப்பட்டார். நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக தனது சமூக வலைத்தளத்தில் கன்னையாலால் பதிவு செய்ததால், அவர் கொல்லப்பட்டது தெரியவந்தது.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு நபர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து என்.ஐ. ஏ விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதையடுத்து, என்.ஐ.ஏ வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.

கன்னையாலால் கொலை சம்பவபத்தால் பெரும் மத பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மொபைல் இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

பலத்த பாதுகாப்புடன் கன்னையாலால் உடல் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெற்று விடாமல் தடுக்க போலீசார் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர். இறுதி ஊர்வலத்தின் போது சிலர் காவிக் கொடிகளையும் ஏந்தியபடி 'மோடி , மோடி' என கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து, உதய்பூரில் உள்ள அசோக் நகர் பகுதியில் உடல் தகனம் செய்யப்பட்டது.

கன்னையாலால் கொடூர கொலை

டி.வி.பேட்டி ஒன்றில் நபிகள் நாயகத்துக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டவர் பா.ஜ.க. செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா ஆவார். அவர் மீது கட்சித்தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் தன்மண்டி பகுதியில் பூட்மகால் என்ற இடத்தில் தையல் கடை நடத்தி வருகிற தையல்காரர் கன்னையா டெலி (வயது 40) என்பவர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கருத்து வெளியிட்டதாக கூறப்படுகிறது.இது தொடர்பாக அவருக்கு கொலை மிரட்டல் வந்து, அவர் போலீசில் புகார் செய்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் 2 பேர் கூர்மையான கத்திகளுடன் கன்னையா டெலி கடைக்கு மோட்டார் சைக்கிளில் வந்திறங்கினர். அவர்கள் தாங்கள் எடுத்து வந்த கத்திகளால் அவரது கழுத்தை அறுத்து தலையை துண்டித்தனர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் பிணமானார். அதைத் தொடர்ந்து கொலையாளிகள் சம்பவ இடத்தில் இருந்து சிட்டாக பறந்து விட்டனர். இந்த கொலைக்காட்சிகளை கொலையாளிகளே வீடியோவாக படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர்.இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. உள்ளூர் சந்தைகள் மூடப்பட்டன. கடைகள் அடைக்கப்பட்டன. கொலையாளிகளை கைது செய்யக்கோரி உளளூர்வாசிகள் போராட்டம் நடத்தினர்.

இந்த படுகொலைக்கு முதல்-மந்திரி அசோக் கெலாட் கண்டனம் தெரிவித்தார். இதையொட்டி அவர் வெளியிட்ட அறிக்கையில், " இது வேதனையான, வெட்கக்கேடான சம்பவம் ஆகும். நாட்டில் தற்போது பதற்றமான சூழல் நிலவுகிறது. பிரதமரும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் நாட்டு மக்களுக்கு உரையாற்றக்கூடாதா? இந்த படுகொலை சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளை பகிர்ந்து கொண்டு, நிலைமையை மோசமாக்கி விட வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்" என கூறி உள்ளார். உதய்பூர் மாவட்டத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு இணையதள சேவை முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த படுகொலையை நடத்திய கொலையாளிகள் ராஜ்சமந்த் மாவட்டத்தின் பீம் பகுதியில் வைத்து நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக கடைசியாக கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

மேலும் செய்திகள்