மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கும் உதய்பூர் படுகொலைக்கும் தொடர்பு..! கொலையாளிகளின் வாகன எண் குறித்து திடுக்கிடும் தகவல்
|கொலையாளிகளில் ஒருவரான ரியாஸ் அக்தாரி, தனது மோட்டார் சைக்கிளுக்கு 2611 என்று எழுதப்பட்ட நம்பர் பிளேட்டைப் பெற கூடுதல் பணம் கொடுத்தார் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கொடூரமான முறையில் கன்னையா லால் வெட்டிக்கொல்லப்பட்டார். நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக தனது சமூக வலைத்தளத்தில் கன்னையாலால் பதிவு செய்ததால், அவர் கொல்லப்பட்டது தெரியவந்தது.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு நபர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து தேசிய பாதுகாப்பு முகமை (என்.ஐ. ஏ) விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதையடுத்து, என்.ஐ.ஏ வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.
கொலையாளிகளில் ஒருவரான ரியாஸ் அக்தாரி, தனது மோட்டார் சைக்கிளுக்கு 2611 என்று எழுதப்பட்ட நம்பர் பிளேட்டைப் பெற கூடுதல் பணம் கொடுத்தார் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. மும்பை பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்ற தேதியுடன் அதை இணைத்து பார்த்து அதிகாரிகள் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
கோஸ் முகமது மற்றும் ரியாஸ் அக்தாரி ஆகியோர் தையல்காரர் கன்ஹையா லாலின் கழுத்தை கொடூரமாக அறுத்துவிட்டு தப்பிக்கப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை வைத்து விசாரணை அதிகாரிகள் துப்பு துலக்கியுள்ளனர்.
அவர்கள் பயன்படுத்திய வாகனத்தில், "ஆர் ஜே 27 ஏஎஸ் 2611" என்ற பதிவு எண் உள்ளது. இந்த பைக் இப்போது உதய்பூரில் உள்ள தண்மண்டி காவல் நிலையத்தில் உள்ளது.
முக்கிய குற்றவாளியான ரியாஸ், "2611" என்ற எண்ணை வேண்டுமென்றே கேட்டு பெற்றுள்ளார். இந்த நம்பர் பிளேட்டுக்கு கூடுதலாக ரூ.5,000 கொடுத்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் விசாரணையில் வெளியாகியுள்ளது.
ரியாஸ் அக்தாரி 2013ல் ஒரு தனியார் வங்கி நிறுவனத்திடம் கடன் வாங்கி பைக்கை வாங்கியதாக வட்டார போக்குவரத்து அலுவலக பதிவுகள் காட்டுகின்றன. வாகனத்திற்கான இன்சூரன்ஸ் 2014 மார்ச்சில் காலாவதியானதும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர் 2014இல் நேபாளத்திற்குச் சென்றதை அவருடைய பாஸ்போர்ட் உறுதிபடுத்துகிறது. பாகிஸ்தானுக்கு அழைப்புகள் செய்ய அவரது தொலைபேசி பயன்படுத்தப்பட்டதையும் அவரது மொபைல் தரவு காட்டுகிறது.
கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் இருவரும் நேற்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. அவர்களை அழைத்து செல்லும்போது பொதுமக்கள் கடுமையாக கூடி முழக்கமிட்டனர். மேலும், உதய்பூர் முழுவதும் பெரும் பதற்றம் நிலவுகிறது.