< Back
தேசிய செய்திகள்
தாவூத் இப்ராகிம் குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துகள் ஏலத்தில் விற்பனை
தேசிய செய்திகள்

தாவூத் இப்ராகிம் குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துகள் ஏலத்தில் விற்பனை

தினத்தந்தி
|
5 Jan 2024 6:29 PM IST

தெற்கு மும்பையில் உள்ள ஆயகர் பவனில் ஏலம் நடந்தது.

மும்பை,

1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்படும் குற்றவாளியான தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் வசிப்பதாக நம்பப்படுகிறது. இந்த நிலையில், தப்பியோடிய தாவூத் இப்ராகிமின் குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துகள், கடத்தல் மற்றும் அந்நிய செலாவணி மோசடி செய்பவர்கள் சொத்து பறிமுதல் சட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த அதிகாரியால் ஏற்பாடு செய்யப்பட்ட ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.

இந்த ஏலம் தெற்கு மும்பையில் உள்ள ஆயகர் பவனில் நடந்தது. மராட்டிய மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தின் கேத் தாலுகாவில் உள்ள மும்ப்கே கிராமத்தில் அமைந்துள்ள நான்கு சொத்துகள் ஏலம் விடப்பட்டது. ஆனால் அவற்றில் இரண்டை யாரும் ஏலம் எடுக்கவில்லை. மற்ற இரண்டு சொத்துகளை சிலர் ஏலம் கேட்டனர். இருப்பினும், ஒரே நபர் இரண்டு சொத்துகளையும் ஏலத்தின் மூலம் பெற்றுக்கொண்டார்.

170.98 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட விவசாய நிலம் ஒன்று குறைந்தபட்ச தொகையாக ரூ.15,440 நியமிக்கப்பட்டு ஏலம் தொடங்கப்பட்டது. அதனை அவர், ரூ.2.01 கோடிக்கு ஏலம் எடுத்தார். 1730 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட மற்றொரு விவசாய நிலத்துக்கு குறைந்தபட்ச தொகையாக ரூ.1,56,270 நியமிக்கப்பட்டது. அதனை அவர், ரூ. 3.28 லட்சத்துக்கு ஏலம் எடுத்தவர். ஏலம் எடுத்தவரின் பெயர் வெளியிடப்படவில்லை.

மேலும் செய்திகள்