அசாமில் 2 உயர் போலீஸ் அதிகாரிகள் கைது
|அரசு வேலையில் சேர 32 ஊழியர்கள் லஞ்சம் கொடுத்தது தொடர்பாக மாநில சிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கவுகாத்தி,
அசாம் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் (ஏபிஎஸ்சி) நடத்திய தேர்வில் லஞ்சம் கொடுத்து அரசு வேலையில் சேர்ந்ததாக 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் உள்பட 34 அரசு ஊழியர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2013 ம் ஆண்டு மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் நடந்த முறைக்கேடுகளை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதி விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜோர்ஹட் மற்றும் உடால்குரி மாவட்டங்களில் பணியமர்த்தப்பட்ட இரண்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் வேலைக்கு சேர லஞ்சம் கொடுத்தற்கான ஆதாரத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் அரசு வேலையில் சேர 32 ஊழியர்கள் லஞ்சம் கொடுத்தது தொடர்பாக மாநில சிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றியது தெரியவந்துள்ளது.
இவர்கள் அனைவரும் 2013ம் ஆண்டு மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வில் பங்கேற்று 2015-16-ம் ஆண்டில் நியமனம் பெற்றவர்கள் ஆவர்.