கொல்கத்தாவில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி
|இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் பகுதியில் 5 மாடி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த 5 மாடி கட்டிடம் உரிய அனுமதியின்றியும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றியும் கட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த கட்டிடத்தில் இன்று அதிகாலை தொழிலாளர்கள் எப்போதும் போல பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது, கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர் என போலீசார் மற்றும் மீட்புப்படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப்படையினர், உடனடியாக மீட்புப்பணிகளை துவக்கினர். தற்போதைய நிலவரப்படி 14 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர்களை அவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "விபத்து நேர்ந்த உடன் மீட்புப்பணிகள் உடனடியாக துவங்கப்பட்டது. 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களும் விரைவில் மீட்கப்படுவார்கள். மருத்துவம், தீயணைப்பு மற்றும் இதர துறைகளைச் சேர்ந்தவர்கள் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். இந்த கட்டிடம் சட்டவிரோதமாக கட்டப்பட்டு வந்துள்ளது. மாநில அரசு சார்பில் இந்த கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி அதிகாரப்பூர்வமாக வழங்கப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக கட்டுமான பணிகளை மேற்கொண்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கு அரசு சார்பில் நிதி உதவி அளிக்கப்படும். அருகாமையில் உள்ள சில வீடுகளும் சேதம் அடைந்துள்ளது. அவர்களுக்கும் அரசு உரிய உதவிகளை வழங்கும்" என்று தெரிவித்துள்ளார்.