புனேவில் ஆறுகளை இணைக்கும் சுரங்கப்பாதையில் விழுந்த 2 விவசாயிகள் பலி
|தண்ணீர் இறைக்கும் நீர்மூழ்கி மோட்டாரை இழுத்துக்கொண்டிருந்தபோது கயிறு அறுந்து கீழே விழுந்ததாக மாவட்ட நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.
புனே,
மராட்டிய மாநிலம் புனே மாவட்டம், இந்தாபூர் தாலுகாவில் உள்ள அகோல் கிராமத்திற்கு அருகே, நீரா மற்றும் பீமா நதிகளை இணைக்கும் சுரங்கப்பாதை உள்ளது. சுமார் 300 அடி ஆழத்தில் உள்ள இந்த சுரங்கப்பாதையில் நேற்று மாலை 2 விவசாயிகள் தவறி விழுந்தனர். அவர்கள் சில மணி நேரங்களுக்குப் பிறகு இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.
இதுபற்றி வால்சந்த் நகர் காவல் நிலைய ஆய்வாளர் விக்ரம் சாலுங்கே கூறிதாவது,
இறந்தவர்கள் அனில் பாபுராவ் நருடே மற்றும் ரத்திலால் பல்பீம் நருடே என அடையாளம் தெரியவந்தது. அவர்கள் இருவரும் நேற்று மாலை 5.30 மணியளவில் சுரங்கப்பாதையில் விழுந்தனர்,
இரண்டு விவசாயிகளின் உடல்களும் நள்ளிரவில் மீட்கப்பட்ட நிலையில் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.
சுரங்கத்தின் மேற்பகுதியில் உள்ள ஷாப்ட் வழியாக இருவரும் தண்ணீர் இறைக்கும் நீர்மூழ்கி மோட்டாரை இழுத்துக்கொண்டிருந்தபோது கயிறு அறுந்து கீழே விழுந்ததாக மாவட்ட நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.