விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக பந்தல் அமைத்தபோது மின்சாரம் தாக்கி 2 பேர் பலி
|இந்து மத கடவுள் விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
காந்திநகர்,
இந்து மத பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி முக்கியமான பண்டிகையாகும். இந்து மத கடவுள் விநாயகர் பிறந்த தினமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் அதிகாலை முதல் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. அதேவேளை, மக்கள் வீடுகள், பொது இடங்களில் கடவுள் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி பண்டியையையொட்டி குஜராத் மாநிலம் ஹீடா மாவட்டம் கிதாஞ்சலி சவுக் என்ற பகுதியில் கடவுள் விநாயகர் சிலை வைக்க நேற்று இரவு அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஏற்பாடு செய்தனர்.
விநாயகர் சிலை வைக்கும் இடத்தை சுற்றி பந்தல் அமைக்கும் பணியில் சிலர் ஈடுபட்டிருந்தனர். இரவு நேரத்தில் பந்தல் அமைக்கும்போது மேலே சென்ற மின்கம்பியை எதிர்பாராத விதமாக பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் தொட்டுள்ளனர். இதில், 3 பேர் மீது மின்சாரம் பாய்ந்தது.
மின்சாரம் பாய்ந்ததில் 2 பேர் சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர். எஞ்சிய ஒருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.