< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்

அரியானாவில் இரு கார்கள் மோதி பயங்கர விபத்து: 6 பேர் பலி

தினத்தந்தி
|
11 March 2024 1:11 PM IST

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சண்டிகார்,

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஹது சியாம் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு 6 பெண்கள் டிரைவருடன் காரில் உத்தரபிரதேசத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அவர்கள் அரியானா மாநிலத்தின் மசானி கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது காரின் டயர் பஞ்சர் ஆனது. இதனால் பின் வந்த சொகுசு கார் அந்த கார் மீது அதிபயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் சொகுசு காரில் பயணித்த 5 பேரில் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்தில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த டிரைவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனால் பலியானோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தை சேர்ந்த ரோஷ்னி (58), நீலம் (54), பூனம் ஜெயின் (50) மற்றும் ஷிகா (40) ஆகியோர் இறந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இமாசல பிரதேசத்தை சேர்ந்த டிரைவர் விஜய் (40); மற்றும் அரியானா மாநிலத்தில் உள்ள கர்காரா கிராமத்தை சேர்ந்த சுனில் (24) என்பவர்களும் உயிரிழந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்