< Back
தேசிய செய்திகள்
100 சதவீத வருகை... 17-வது மக்களவையில் தனிச்சிறப்பு பெற்ற 2 பா.ஜ.க. உறுப்பினர்கள்
தேசிய செய்திகள்

100 சதவீத வருகை... 17-வது மக்களவையில் தனிச்சிறப்பு பெற்ற 2 பா.ஜ.க. உறுப்பினர்கள்

தினத்தந்தி
|
13 Feb 2024 12:10 PM GMT

நாடாளுமன்றத்தில் மிகவும் சுறுசுறுப்பான உறுப்பினராக, உத்தர பிரதேசத்தின் ஹமிர்பூர் பா.ஜ.க. உறுப்பினர் புஷ்பேந்திர சிங் சாண்டெல் திகழ்கிறார்.

புதுடெல்லி:

17-வது மக்களவையின் கடைசி கூட்டத்தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்த புள்ளி விவரங்களை பி.ஆர்.எஸ். இந்தியா என்ற தன்னார்வ அமைப்பு தனது இணையதளத்தில் (www.prsindia.org) பதிவேற்றி உள்ளது.

அதில் உள்ள தரவுகளின்படி, ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் தொகுதி எம்.பி.யான சவுத்ரி, சத்தீஷ்கர் மாநிலம் கான்கெர் தொகுதி எம்.பி. மோகன் மாண்டவி ஆகியோர் 17வது மக்களவையில் 100 சதவீத வருகையை பதிவு செய்திருக்கிறார்கள். அதாவது இருவரும் ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல் கூட்டத்தொடரில் பங்கேற்று தனிச்சிறப்பு பெற்றுள்ளனர். மக்களவையில் இருவரும் அடுத்தடுத்த இருக்கைகளில் அமந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் மிகவும் சுறுசுறுப்பான உறுப்பினராக உத்தரபிரதேசத்தின் ஹமிர்பூரைச் சேர்ந்த பா.ஜ.க. உறுப்பினர் புஷ்பேந்திர சிங் சாண்டெல் திகழ்கிறார். இவர் மொத்தம் 1,194 விவாதங்களில் பங்கேற்றுள்ளார். அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளைச் சேர்ந்த குல்தீப் ராய் சர்மா(காங்கிரஸ்) 833 விவாதங்களில் பங்கேற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர் மலூக் நாகர் 582 விவாதங்களில் பங்கேற்று மூன்றாம் இடத்தையும், தமிழகத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (தர்மபுரி தொகுதி) 307 விவாதங்களில் பங்கேற்று நான்காம் இடத்தையும், புரட்சிகர சோசலிச கட்சி உறுப்பினர் பிரேமச்சந்திரன் 265 விவாதங்களில் பங்கேற்று ஐந்தாம் இடத்தையும் பிடித்துள்ளனர். சுப்ரியா சுலே 248 விவாதங்களில் பங்கேற்று 6ம் இடத்தில் உள்ளார்.

சன்னி தியோல், சத்ருகன் சின்ஹா, ரமேஷ் ஜிகஜினாகி, பிஎன் பச்சேகவுடா, பிரதான் பருவா, அனந்த் குமார் ஹெக்டே, ஸ்ரீனிவாச பிரசாத், திபியேந்து அதிகாரி, அதுல் குமார் சிங் ஆகியோர் 17-வது மக்களவையில் எந்த விவாதத்திலும் பங்கேற்கவில்லை.

மேலும் செய்திகள்