உன்சூரில் நடந்த இரட்டை கொலை வழக்கில் சிறுவன் உள்பட 2 பேர் கைது
|உன்சூரில் நடந்த இரட்டை கொலை வழக்கில் சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மைசூரு:
உன்சூரில் நடந்த இரட்டை கொலை வழக்கில் சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இரட்டை கொலை
மைசூரு மாவட்டம் உன்சூர் டவுன் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 70). இவர் அப்பகுதியில் உள்ள மரக்கடையில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார். அவருடன் அதேப்பகுதியை சேர்ந்த சண்முகம் (60) என்பவரும் தங்கி இருந்தார். இந்தநிலையில், கடந்த 21-ந் தேதி இரவு கடையில் புகுந்த மர்மநபர்கள் வெங்கடேஷ், சண்முகத்தை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தனர்.
இதுகுறித்து உன்சூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்தநிலையில் கடந்த 24-ந் தேதி இரட்டை கொலை செய்த வழக்கில் உன்சூர் டவுன் சரஸ்வதிபுரத்தை சேர்ந்தவர் அபிஷேக் (வயது23) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
2 பேர் கைது
அவர் பணத்திற்காக கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார். இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில், நேற்று உன்சூர் டவுன் பகுதியை சேர்ந்த தவுசிப் (30), மற்றும் அதேப்பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் 3 பேரும் வழிப்பறி, கொள்ளை, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதில் வரும் பணத்தை வைத்து ஆடம்பரமாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்தநிலையில் கடந்த 21-ந் தேதி அன்று அவர்களிடம் பணம் இல்லாததால் மரக்கடைக்குள் புகுந்து கொள்ளை அடிக்க சென்றுள்ளனர்.
சிறையில் அடைத்தனர்
இதில், கடையில் இருந்த வெங்கடேஷ், சண்முகம் ஆகியோர் 3 பேரையும் பார்த்துள்ளனர். இதனால் அபிஷேக், தவுசிப், சிறுவன் ஆகியோர் வெங்கடேஷ், சண்முகத்தை கொலை செய்ததாக கூறினர். இதையடுத்து தவுசிப், சிறுவனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் தவுசிப்பை சிறையில் அடைத்தனர். சிறுவனை சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான்.