< Back
தேசிய செய்திகள்
யோகி ஆதித்யநாத் மற்றும் அயோத்தி ராமர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இருவர் கைது
தேசிய செய்திகள்

யோகி ஆதித்யநாத் மற்றும் அயோத்தி ராமர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இருவர் கைது

தினத்தந்தி
|
4 Jan 2024 2:15 AM IST

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமர் கோவிலின் திறப்பு விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமர் கோவிலின் திறப்பு விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் சர்வதேச பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் உத்தரப் பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மீது வெடிகுண்டுவீச்சு மற்றும் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக சமூக ஊடகங்களில் பதிவிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக உத்தரபிரதேச சிறப்பு அதிரடிப்படையின் குழு, லக்னோவில் உள்ள கோமதி நகர் விபூதி காண்ட் பகுதியில் இருந்து தஹர் சிங் மற்றும் ஓம்பிரகாஷ் மிஸ்ரா ஆகியோரை கைது செய்தது.

அவர்கள் இருவரும் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், எஸ்டிஎப் தலைவர் அமிதாப் யாஷ் மற்றும் அயோத்தியின் ராமர் கோவிலுக்கு '@iDevendraOffice' என்ற ஐ.டியை பயன்படுத்தி நவம்பரில் தங்கள் எக்ஸ் வலைதள பதிவில் மிரட்டியுள்ளனர்.

விசாரணையில் முதலில் 'alamansarikhan608@gmail.com' மற்றும் 'zubairkhanisi199@gmail.com' என்ற மின்னஞ்சல் ஐ.டி.கள் மிரட்டல் பதிவுகளை அனுப்ப பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. மின்னஞ்சல் ஐ.டி.களின் தொழில்நுட்ப பகுப்பாய்வுக்குப் பிறகு, தஹர் சிங் மின்னஞ்சல் கணக்குகளை உருவாக்கியதும், ஓம்பிரகாஷ் மிஸ்ரா மிரட்டல் செய்திகளை அனுப்பியதும் கண்டறியப்பட்டது.

தஹர்சிங் மற்றும் மிஸ்ரா ஆகிய இருவரும் கோண்டாவில் வசித்து வருவதாகவும், அவர்கள் ஒரு பாராமெடிக்கல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக எஸ்.டி.எப். மேலும் விசாரணை நடத்தி வருகிறது

மேலும் செய்திகள்