டுவிட்டரில் ஏற்பட்டு வரும் குழப்பம் உலகளவில் 'கூ' செயலி பயனர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
|எலான் மஸ்க்கால் டுவிட்டரில் ஏற்பட்டு வரும் குழப்பங்களுக்கு மத்தியில் உலகளவில் ‘கூ’ செயலி பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
புதுடெல்லி
உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், பிரபல சமூக ஊடக நிறுவனமான டுவிட்டரை சில நாட்களுக்கு முன்பு தன் வசப்படுத்தினார். எலான் மஸ்க் டுவிட்டர் உரிமையாளரானதை தொடர்ந்து அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
டுவிட்டரில் தற்போது, அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்குகளில் 'புளூ டிக்' பயன்படுத்துகின்றனர். இந்த டுவிட்டர் கணக்கு அவர்களுடைய அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு தான் என்பதை உறுதிபடுத்திக்கொள்ள, டுவிட்டர் தளத்தில் பெயருக்கு அருகில் நீலநிற புளூ டிக் குறியீடு குறிக்கப்பட்டிருக்கும். இதன்மூலம், குறிப்பிட்ட பயனர்கள் டுவிட்டரில் பல்வேறு அம்சங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.
டுவிட்டர் 'புளூ டிக்கிற்கு' இனி மாதம் 7.99 டாலர் கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளதாக எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் கட்டணம் செலுத்துவோர், வீடியோ, ஆடியோ போன்றவற்றை கூடுதல் நேரத்திற்கு பதிவுசெய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதனன்று அமெரிக்கா மற்றும் சில நாடுகளில் உள்ள பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட புளூ சேவை, வரும் நாட்களில் இந்தியாவில் பரவலாகக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சேவையானது இந்தியாவில் பெற மாதம் ரூ. 719 செலவாகும், இது துல்லியமாக இருந்தால், முதலில் ஐபோன் பயனர்களுக்கு வழங்கப்படும்.
டுவிட்டரில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையில் இந்தியாவை தலைமையிடமாகக் கொண்ட மைக்ரோ பிளாக்கிங் தளமான கூ, சமீபத்தில் 5 கோடி பதிவிறக்கங்களைப் பெற்று அசத்தி வருகிறது.
இதற்கிடையே, எலோன் மஸ்க் புளூ டிக் கணக்காளர்களுக்கு 8 டாலர் (ரூ.719) வசூலிப்பதாக அறிவித்ததுபோல், கூவின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அப்ரமேயா ராதாகிருஷ்ணா, "கூவில் இது முற்றிலும் இலவசம்" எனத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்ற குளோபல் டெக் அட்வகேட்ஸ் (ஜிடிஏ) நிகழ்ச்சியில் பேசிய ராதாகிருஷ்ணா, "ஆங்கிலம் பேசும் இந்தியர்கள் கன்னடம், தமிழ் மற்றும் இந்தி மக்களுடன் அவர்களின் மொழிகளில் பேசலாம், மேலும் உலகளவில் டுவிட்டருக்கு மாற்றாக இருக்க விரும்புகிறோம்" என்றார்.
மூன்றாம் தரப்பு விற்பனையாளர் மூலம் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி பச்சை நிற சுய டிக் பெற்ற பயனர்களுக்கு கூ செயலியில் இடுகைகளைத் திருத்தும் திறன், மஞ்சள் நிற அடையாளத்தைப் பாதுகாத்தல் மற்றும் தன்னார்வ சுய சரிபார்ப்பு செயல்முறை உள்ளிட்ட பல புதிய அம்சங்களை இயங்குதளம் அறிமுகப்படுத்தியுள்ளது.
கூவின் இணை நிறுவனர் மயங்க் பிடவட்கா "எங்களின் 2.5 ஆண்டு குறுகிய காலத்தில் 7,500 க்கும் மேற்பட்ட பிரபலங்கள் கூவில் உள்ளனர். சமூக ஊடகப்பரப்பில் உலகளவில் நிகழும் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, ஆங்கிலம் பேசும் பார்வையாளர்களுக்கும் கூவைக் கிடைக்கச் செய்ய எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு இருப்பதாக உணர்கிறோம்.
நாங்கள் வளரும்போது உலகம் முழுவதும் தாய்மொழியில் பேசும் பயனர்களை கூவில் இணைப்போம். புளூ டிக் போன்ற பயனர்களின் வெளிப்படைத் தன்மைக்கு பணம் பெறுவது சரியான நடவடிக்கை கிடையாது" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், டுவிட்டர் பயனர்கள் அம்சங்களுக்காக கட்டணம் வசூலிக்கப்படும் சூழ்நிலையில், நாங்கள் அதை இலவசமாக வழங்குகிறோம், ஏனெனில் இணையத்தில் தங்கள் அடையாளத்தை நிரூபிப்பது போன்ற அடிப்படை உரிமைகளுக்காக பயனர்கள் கட்டணம் வசூலிக்கப்படக்கூடாது என்று நாங்கள் நம்புகிறோம்" என்றும் அவர் கூறியுள்ளார்.
உலகில் முன்னணி சமூக வலைதளமான டுவிட்டரில் ஆங்கிலம் முதன்மை மொழியாக செயல்பட்டு வருகிறது. இந்திய மொழிகளைக் கொண்டு இயங்கும் 'கூ' செயலி விரைவில் உலகளவில் தாய்மொழி பயனர்களுக்கு சேவையை வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.