நிவின்பாலி மீதான பாலியல் புகாரில் திருப்பம் - வெளியான பரபரப்பு தகவல்கள்
|நிவின்பாலி மீதான பாலியல் புகார் தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
திருவனந்தபுரம்,
கேரளாவில் மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவின் அறிக்கை சமீபத்தில் வெளியானது. இந்த அறிக்கையடுத்து நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.
இது மலையாள திரையுலகில் பல்வேறு அதிரடி திருப்பங்களையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே பாதிக்கப்பட்ட நடிகைகள் அரசு அமைத்த சிறப்பு விசாரணை குழுவிடம் ரகசியமாக வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில், சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாகக் கூறி கடந்த ஆண்டு வெளிநாட்டில் வைத்து நிவின் பாலி உள்ளிட்ட சிலர் பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்தியதாக சிறப்பு புலனாய்வு குழுவிடம் பெண் ஒருவர் புகார் அளித்தார். இதனையடுத்து, நடிகர் நிவின் பாலி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிவின்பாலி மீதான புகார் தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, வெளிநாட்டில் வைத்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படும் அந்த சமயத்தில் நிவின்பாலி கொச்சியில் தங்கி இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார் கொச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் நிவின்பாலி தங்கி இருந்ததற்கான ஆதாரங்களை சேகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.